மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை சவாலாக மீட்டோம் - லெப்டினன்ட் ஈசன் பேட்டி
தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு ஏராளமானவர்களை மீட்டுள்ளோம்
தாமிரபரணி ஆற்றின் கடும் வெள்ளப்பெருக்கில் பல ஊர்கள் கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், யாருமே செல்ல முடியாத திருவைகுண்டத்திற்குள் எங்களின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளே சென்று கர்ப்பிணி பெண் உள்ளிட்டவர்களை கடும் சவாலாக மீட்டோம் என லெப்டினன்ட் ஈசன் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்புகள், கிராமங்கள், நகரங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதில் பொதுமக்கள் சிக்கி தவித்து வந்த நிலையில் இவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீனவர்கள் என மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கோவையில் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மீட்பு பணிக்காக காவல்துறை சார்பில் அழைக்கப்பட்டது. இதில் ராணுவம், விமானம் கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் உள்ளனர். இவர்கள் லெப்டினன்ட் ஈசன் தலைமையில் சுமார் 15 பேர் 18ஆம் தேதி இரவு நெல்லை மாவட்டம் சீவலப்பேரி வந்து அடைந்தனர்.அங்கிருந்து தொடர்ந்து நெல்லை, தூத்துக்கு மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
அவர்கள் மேற்கொண்ட சவாலான மீட்பு பணிகள் குறித்து ஆணையத்தின் லெப்டினன்ட் ஈசன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மற்றும் நடுவக்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் அகரம், ஆறாம்பண்ணை ஆகிய பகுதிகளில் ஏராளமானவர்களை மீட்டோம்.வர விரும்பாதவர்களுக்கு உணவு, பிஸ்கட், விரிப்பு ஆகிய பொருட்களை கடும் வெள்ளத்தில் படகில் சென்று கொடுத்து உதவிகள் செய்தோம்.
தூத்துகுடி மாவட்டம், திருவைகுண்டத்தில் கடும் வெள்ளப் பெருக்கால் யாருமே மீட்பு பணி செய்ய முடியாத நிலை இருந்தது. இதனை நாங்கள் சவாலாக எடுத்து எங்கள் ஆணையத்தை சேர்ந்த உதயன் மற்றும் உள்ளூர் உதவி ஆய்வாளர் உடன் படகில் செல்ல முடியாத நிலையில் ஜேசிபி எந்திரத்தில் சென்று கர்ப்பிணி பெண் ஒருவரை மீட்டு வந்தோம். அங்கிருந்து வெளியேற விரும்பாதவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினோம். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு ஏராளமானவர்களை மீட்டுள்ளோம்.
எங்கள் ஆணையத்தில் ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்கள் தன்னார்வலராக விடுமுறை காலத்தில் வந்தும் பணியாற்றுகின்றனர்.சென்னையில் மீட்பு பணியை முடித்து உடனடியாக நெல்லை வரும் சூழல் இருந்த போதும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம்” என தெரிவித்தார்.
What's Your Reaction?