விருதுநகரில் உரிய ஆவணமில்லாத 16.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..! கருவூலத்தில் ஒப்படைப்பு...
விருதுநகரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைக்கடைகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட 16.7 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், சத்திரெட்டியாபட்டி விலக்கு அருகே தனியார் கூரியர் வாகனங்களை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனங்கள் மதுரையில் உள்ள தனியார் கூரியர் ஏஜென்சிக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இரண்டு வாகனங்களில் ஆவணங்கள் இன்றி 11.5 கிலோ தங்க நகைகளை நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் இருக்கும் நகைக்கடைகளுக்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல், மதுரையிலிருந்து 5.2 கிலோ தங்க நகைகளை எடுத்து வந்த வாகனத்தை தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனை செய்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் சிவகாசி, ராஜபாளையத்தில் இருக்கும் நகைக்கடைகளுக்கு ஆவணங்கள் இன்றி நகைகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மூன்று வாகனங்களில் இருந்தும் மொத்தமாக உரிய ஆவணங்கள் இல்லாத 16.7 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த நகைகள் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விருதுநகர் கருவூலத்தில் சீல் வைத்து வைக்கப்பட்டது.
What's Your Reaction?