சற்று சரிந்தாலும் சரியான பதில் வேண்டும் ! நிர்வாகிகள், தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

வாக்கு குறைந்தால் அமைச்சர், மாவட்ட செயலாளர் மட்டுமின்றி கடைநிலை நிர்வாகி வரை அதற்கு பொறுப்பாகும் - மு.க.ஸ்டாலின்

Mar 20, 2024 - 16:14
Mar 20, 2024 - 16:17
சற்று சரிந்தாலும் சரியான பதில் வேண்டும் ! நிர்வாகிகள், தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அந்த தொகுதிக்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் தேர்தல் களம் சூடிபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி, வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் இடங்கள் என அனைத்தையும் வெளியிட்டுவிட்டது. அதிமுகவிலும், அதன் போட்டியிடங்கள் பெரும்பாலனவை அறிவிக்கப்பட்டுவிட்டன. கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கான 5 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதேவேளையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி சார்பில் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் தீவிர பிரசாரங்களை தொடங்கவுள்ளன. 

இதனிடையே இன்று மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.கஸ்டாலின், எந்த இடத்தில் வாக்குகள் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும், ஒரு தொகுதியில் வாக்கு குறைந்தால் அமைச்சர், மாவட்ட செயலாளர் மட்டுமின்றி கடைநிலை நிர்வாகி வரை அதற்கு பொறுப்பாகும், அந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் கேள்விகள் கேட்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். அத்துடன், எல்லா தொகுதியிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் திமுக உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.   

மேலும், போஸ்டர்கள், துண்டு அறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களும் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்ட முதலமைச்சர், தோழமையோடு இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இறுதியாக ஜூன் 4-ஆம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து தன்னைச் சந்தியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow