குடிபோதையில் கொலைவெறி... நண்பனைக் கொன்று புதைத்த கொடூரம்.. தேவகோட்டையை திகைக்க வைத்த சம்பவம்..

May 14, 2024 - 21:27
குடிபோதையில் கொலைவெறி... நண்பனைக் கொன்று புதைத்த கொடூரம்.. தேவகோட்டையை திகைக்க வைத்த சம்பவம்..

தேவகோட்டை அருகே மதுபோதையில் நண்பனை கொலை செய்துவிட்டு கண்மாய்க்குள் புதைத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த  பாண்டியராஜன் என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பாண்டியராஜனின் நண்பரான  பூங்கொடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார், அவரை மது அருந்த அழைத்தார். அதன்பேரில், பாண்டியராஜன் தனது டாட்டா ஏசி வேனை எடுத்துக்கொண்டு முத்துநாட்டு கண்மாய் பகுதிக்கு சென்றார்.

அங்கு செல்வகுமார் உட்பட 4 பேர் மது அருந்த வந்திருந்தனர். இதையடுத்து மது அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறிய நிலையில், படுகாயம் அடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார். 

இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் ,பாண்டியராஜனின் உடலை யாருக்கும் தெரியாமல் கண்மாய்க்குள் புதைத்தனர். டாடா ஏசி வாகனத்துடன் அங்கிருந்து கோவைக்குச் சென்று வாகனத்தை விற்றுவிட்டு தலைமறைவாகினர். 

இதனிடையே, பாண்டியராஜனை காணவில்லை என அவரது உறவினர்கள் தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், டாட்டா ஏசி வாகனம் கோவையில் விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து வாகனத்தை யார் விற்றது என விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த செல்வக்குமார் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கண்மாயில் இருந்து பாதி அழுகிய நிலையில் பாண்டியராஜனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து வட்டாட்சியர் அசோக்குமார் முன்னிலையில் அரசு மருத்துவர் செந்தில்குமார் அடங்கிய மருத்துவ குழுவினர் அங்கேயே உடற்கூராய்வு செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மது போதையில் நண்பனையே கொலை செய்துவிட்டு கண்மாய்க்குள் புதைத்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow