நகைக்கடை பெண் ஊழியர்களைக் கூட்டு சேர்த்து நகை திருட்டு - 3 பேர் கைது
தங்க வளையல் கம்மல் உள்ளிட்டவைகளை கொடுத்து அவர்களையும் திருட்டுக்கு உதவி செய்ய செய்துள்ளது தெரியவந்தது.
மார்த்தாண்டத்தில் நகைக்கடை உரிமையாளரின் நம்பிக்கைக்குரியவராக மாறி கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களை கூட்டு சேர்த்து 59 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை திருடிய விற்பனையாளர் மற்றும் உதவி புரிந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நகைக்கடை வியாபாரியான இவருக்கு சொந்தமாக பம்மம் பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் விற்பனையாளராகவும் கணக்கராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் அருமனை பகுதியை சேர்ந்த அனீஷ் (29) என்பவர் கடை திறந்த நாளில் இருந்து சுமார் 7 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இதனால் முதலாளியின் நம்பிக்கைக்குரிய நபராக மாறி உள்ளார். இதனால் உரிமையாளர் சுரேஷ் கடையை அனீஷின் பொறுப்பில் விட்டுள்ளார். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட அனீஷ் கடையில் பணிபுரியும் ஷாலினி (28), அபிஷா (25) ஆகிய இரண்டு பெண்களையும் கூட்டாக சேர்த்து கடையில் இருப்பு இருக்கும் நகைகளை விற்பனை ஆனதுபோல் கணக்கு காட்டி அவ்வப்போது சிறுக, சிறுக நகைகளை திருடி எடுத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான கணக்கை சரிபார்க்க வேண்டி பணியாட்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு சுரேஷ் கடைக்கு வந்து ரகசிய அறையில் வைத்திருந்த நகைகளை எடுத்து சரிபார்த்தபோது சுமார் 59 சவரன் தங்க நகை காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் பொருந்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பின்னோக்கி ஆய்வு செய்து பார்த்தபோது அனீஷ் கடையில் இருக்கும் நகைகளை சிறுக, சிறுக திருடி செல்லவதும் அதற்கு அந்த பெண்கள் உதவி புரிவதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஆதாரங்களை எடுத்து வைத்துக்கொண்ட சுரேஷ் மார்த்தாண்டம் போலீஸில் புகார் ஒன்றை அளித்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் அனீஷ் கடைக்கு வேலைக்கு வந்ததும் போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து உண்மைகளை வரவழைத்த பின் கடையில் இருந்த இரண்டு பெண்களையும் மகளிர் போலீசாரின் உதவியுடன் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அனீஷிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
கடையில் இருந்து அவ்வப்போது திருடி எடுத்து சென்ற நகைகளை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு தனக்கு சொந்தமான நிலத்தில் ஆடம்பர வீடு ஒன்றை கட்டி உள்ளார். மேலும் மூன்று பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனத்தையும் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இதுகுறித்து வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது வங்கியில் கடன் பெற்று வீடுகட்டி வருவதாகவும், வாகனங்கள் வாங்கியதாகவும் கூறி ஏமாற்றி உள்ளார். மேலும் கடையில் இருந்த இரண்டு பெண்களுக்கும் அவ்வப்போது தங்க வளையல் கம்மல் உள்ளிட்டவைகளை கொடுத்து அவர்களையும் திருட்டுக்கு உதவி செய்ய செய்துள்ளது தெரியவந்தது.
பெண்களும் தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு திருட்டுக்கு உதவியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து கடையில் இருந்து திருடி எடுத்து சென்று விற்பனை செய்த நகைகளையும் சொகுசு இருசக்கர வாகனங்களையும் மீட்டு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?