லிஃப்ட் கொடுத்தது குத்தமா?.. கொடைக்கானல் மலைச்சாலையில் கொள்ளை முயற்சி… சுற்றுலா பயணிகளே உஷார்..
கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தவரை கத்தியால் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கொடைக்கானலில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 22) இரவு வழக்கம் போல் முனியாண்டி தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கொடைக்கானல் மலைச்சாலையில் செண்பகனூர் பிரிவு அருகே 3 இளைஞர்கள் அவசரமாக போக வேண்டும் எனக் கூறி அவரிடம் லிஃப்ட் கேட்டனர். இதையடுத்து ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
நுழைவாயில் சோதனை சாவடியை நெருங்கியபோது அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து முனியாண்டியின் தலையில் பலமாக தாக்கினார். உடனே சுதாரித்துக் கொண்ட முனியாண்டி, இருசக்கர வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டார். ஆட்கள் வருவதை அறிந்த மூவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடினர். தலையில் படுகாயம் அடைந்த முனியாண்டி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூவரும் பெருமாள்மலை பகுதியில் இருந்து பேருந்தில் வத்தலக்குண்டு நோக்கி செல்வதாக தகவல் கிடைத்த நிலையில், விரைந்த சென்ற போலீசார் கெங்குவார்பட்டி சோதனை சாவடியில் அவர்களை மடக்கிப் பிடித்து கொடைக்கானல் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மூவரும் மதுரை திடீர் நகரை சேர்ந்த சிவகார்த்திகேயன், சங்கரேஸ்வரன் மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும், லிஃப்ட் கேட்பதுபோல் இருசக்கர வாகனத்தை திருடி செல்ல திட்டமிட்டதும், சிவகார்த்திகேயன், சங்கரேஸ்வரன் ஆகியோர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அம்பலமானது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் மலைச்சாலையில் சென்ற நபரிடம் லிஃப்ட் கேட்பது போல் நாடகமாடி இருசக்கர வாகனத்தை திருட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் இதுபோன்று யாராவது லிஃப்ட் கோட்டால் தர வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?