7 நாட்களில் 36 பேர் குண்டாஸில் கைது.. குறிவைத்து தூக்கும் சென்னை போலீஸ்..
சென்னையில் கடந்த 7 நாட்களில் 36 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நேற்று வரை (ஏப்ரல் 28 ) வரை மொத்தம் 423 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையிலான 7 நாட்களில் 36 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்டதாக 208 பேர், திருட்டு, பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 70 பேர், கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்ததாக 104 பேர், , மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 3 பேர், பாலியல் தொழில் நடத்தியதாக 9 பேர் என 423 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றங்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.
What's Your Reaction?