WIFI ஏடிஎம் கார்டுகள் மூலம் கொள்ளை.. B.Tech பட்டதாரிக்கு சிறை.. சென்னை மக்களே உஷார்…
கீழே தவறவிடும் WIFI ஏடிஎம் கார்டுகளை எடுத்து அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த பி.டெக் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை சூளைமேடு, வன்னியர் தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் வேந்தன். இவரது ATM கார்டு கடந்த மார்ச் 31-ம் தேதி தொலைந்து போனது. ஆனால், ATM கார்டை யாரோ பயன்படுத்தி 3 தவணைகளாக ரூ.11,870 வரை பணம் எடுத்துள்ளதாக கார்த்திக் வேந்தனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் பெரும் அதிர்ச்சியை அடைந்த அவர், சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நவீன மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஏடிஎம் அருகே ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிரவைக்கும் தகவல்கள் அம்பலமாகின.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தல்லா சீனிவாசலு என்ற அந்த நபர், B.Tech பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வங்கியில் பணிபுரிந்து வந்தார். அப்போது டெபிட் கார்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் மோசடி செய்து பணம் எடுப்பது போன்ற தொழில்நுட்ப நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டார். இதையடுத்து டெபிட் கார்டுகளை திருடுவதையே முழுத் தொழிலாக மாற்றிக் கொண்டார் தல்லா சீனிவாசலு.
பொதுமக்கள் தவறவிடும் ATM கார்டுகள் மற்றும் WIFI வசதி கொண்ட கார்டுகள் ஆகியவற்றை திருடி ATM மெஷின் மூலமாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை சிறுக சிறுக ஸ்வைப் செய்து பணத்தைத் திருடி வந்தார். அதன் மூலம், சொகுசாக வாழ்க்கை நடத்தியும், ஆன்லைன் ரம்மியில் விளையாடியும் பணத்தை செலவிட்டு வந்தார் தல்லா சீனிவாசலு.
திருப்பதி, பெங்களூர், மற்றும் ஹைதராபாத் போன்ற மாநிலங்களில் கைவரிசை காட்டியதும் ஐதராபாத்தில் மட்டும் ஏடிஎம் கார்டுகளை திருடியதாக அவர் மீது 11 வழக்குகள் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தல்லா சீனிவாசலுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 64 ATM கார்டுகள், Paytm swipe இயந்திரம், லேப்டாப், மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் ATM கார்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் WIFI ATM கார்டுகளை வைத்திருப்பவர்கள் கார்டு தொலைந்தவுடன் அதனை ரத்து செய்துவிட வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?