கடைசியா நல்லா சாப்பிட்டுக்கோ.. சொல்லி கொலை செய்த கும்பல்.. சென்னையில் பயங்கரம்..

Apr 29, 2024 - 21:04
கடைசியா நல்லா சாப்பிட்டுக்கோ.. சொல்லி கொலை செய்த கும்பல்.. சென்னையில் பயங்கரம்..

சென்னையில் பட்டப்பகலில் ரவுடியை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டல் விடுத்த கும்பல்தான் இந்த கொலையை செய்தனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் சரத்குமார். 28 வயதான இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரத் தன்னுடைய பைக்கில், வில்லிவாக்கம் மேம்பாலத்தில் சென்ற போது, 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாக்க முயன்ற நிலையில், சுதாரித்துக் கொண்ட சரத், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இந்தக் கொடூர தாக்குதலில் தலை, முகம், மார்பு பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்ட சரத், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். பட்டப்பகலில் தெருவில் ஓடவிட்டு ஒருவரை வெட்டியதைக் கண்ட பொதுமக்கள், அச்சத்தில் அங்கிருந்து சிதறி ஓடினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜமங்கலம் போலீசார், சரத்தின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

இதனிடையே சரத்தின் நண்பர் சர்போஜி என்பவரின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு ஆடியோ ஒன்று வந்தது. அந்த ஆடியோவில் "உன் வாத்தியாரை அடித்துப் போட்டிருக்கிறோம். அடுத்த நீ தான்" என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். 

மேலும், சரத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கின் மெசேஜை சோதனை செய்ததில், peace of mind என்ற கணக்கில் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்தது. அந்த மெசேஜில், "என்ன கதையென்று நியூஸில் தெரியும், ஆனால், அதைப் பார்க்க நீ உயிருடன் இருக்க மாட்டாய்" எனவும் "இப்போவே நன்றாக சாப்பிட்டுக் கொள்" எனவும் அந்த நபர் கூறியிருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணமான பெண் ஒருவரை சரத்தின் நண்பரான ஜோசப் அழைத்து சென்றதாகவும் அதற்கு சர்போஜியும், சரத்தும் உதவியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரத்தில் சரத்தை கொலை செய்தனரா? அல்லது  கடந்த 2019-ம் ஆண்டு  பெரவள்ளூர் பகுதியில் பூசாரி ஜானகிராமன் கொலை‌ செய்யப்பட்ட வழக்கில் சரத் முக்கிய குற்றவாளி என்பதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில்  போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில்  பட்டப்பகலில் நடந்த கொலை இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒருவரை கொலை செய்ய உள்ளதாக அந்த மர்ம கும்பல் மிரட்டல் விடுத்திருப்பது போலீசாருக்கே சவால் விடுப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow