CSK vs LSG: ஆட்டநாயகன் விருது எனக்கா? தோனி அடித்த கமெண்ட்
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது தோனி தலைமையிலான சென்னை அணி.

லக்னோவில் நேற்றையதினம் சென்னை மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அஸ்வின், கான்வே ஆகியோர் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட நிலையில் ஷேக் ரஷீத், ஓவர்டன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் இந்தத் தொடரில் சென்னை அணியின் லக்கி சார்ம் ஆக விளங்கும் கலீல் அகமது மார்க்ரம் விக்கெட்டை பவர் ப்ளேக்குள் வீழ்த்த ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த வருடம் லக்னோ அணிக்கு நம்பிக்கைக்குரிய நாயகனாக விளங்கி வந்த பூரான் 8 ரன்னின் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
ஜடேஜா, நூர் அகமது தங்களது சுழலில் அசத்த ரன்கள் குவிக்க முடியாமல் திணறியது லக்னோ அணி. நூர் அகமது நான்கு ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஜடேஜா 3 ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பொறுமையாக ரன்கள் எடுத்த வந்த லக்னோ அணியினர், சீரான இடைவெளியில் விக்கெட்களையும் பறிக்கொடுக்கத்தனர். லக்னோ அணியின் கேப்டன் பண்ட் மட்டும் மறுமுனையில் நிதானமாக விளையாடி 63 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் பதிரானா பந்துவீச்சில் பண்ட் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்தது லக்னோ அணி.
கைக்கொடுத்த பவர் ப்ளே:
இந்த ஐபிஎல் தொடரில் பவர் ப்ளே ஓவர்களில் மோசமாக பேட்டிங் செய்து வந்தது சென்னை அணி. சென்னை அணிக்காக புதிய ஓபனிங் வீரராக களமிறங்கிய ஷேக் ரஷீத் பவுண்டரிகளை விளாசி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களை எடுத்தது சென்னை அணி. ரஷீத் 27 ரன்கள், ரச்சின் 37 ரன்கள், ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்களில் என சீராக விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஒருக்கட்டத்தில் இந்த மேட்சும் சாமிக்கு தான் போல, என சென்னை ரசிகர்கள் சோர்ந்துவிட்டனர்.
7-வது வீரராக களத்தில் இறங்கிய தோனி பந்துகளை நாலாப்புறமும் பறக்க விட்டார். இதனால், சென்னை ரசிகர்களுக்கு மீண்டும் புத்துயிர் வந்தது. 11 பந்தில் 26 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் தோனி களத்தில் இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும்,1 சிக்ஸரும் அடங்கும். மறுமுனையில் சிவம் துபே 43 ரன்களுடன் களத்தில் இருந்தார். 19.3 ஓவரில் இலக்கை அடைந்த நிலையில், சென்னை அணியின் ப்ளே-ஆப் கனவுக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது.
1 கேட்ச், 1 ஸ்டெம்பிங், 1 ரன் அவுட் என பீல்டிங்கில் அசத்திய கையோடு, கடைசி நேரத்தில் பேட்டிங்கில் அதிரடியாகவும் விளையாடிய தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், “ எனக்கு ஏன் இந்த விருது (ஆட்டநாயகன்) கொடுத்தார்கள் என யோசித்தேன்? நூர் மிக அருமையாக பந்து வீசியிருந்தார். அணியில் மேற்கொண்ட சில மாற்றங்கள் நல்ல ரிசல்டை கொடுத்துள்ளது. ஷேக் ரஷீத், நீண்ட காலமாக எங்களுடன் இருக்கிறார். வலையில் வேகப்பந்து,சுழற்பந்துவீச்சுகளை நன்றாக எதிர்க்கொள்கிறார். அவர் திறமையான வீரர். இது வெறும் ஆரம்பம் மட்டுமே, அவரின் செயல்பாடு இன்னும் களத்தில் நன்றாக எதிரொலிக்கும்” என்றார்.
சென்னை நேற்றைய போட்டியில் வெற்றிப் பெற்ற நிலையிலும், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 4 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






