ஐயா ஜாலி வெயிலு! ஹாயாக வெயில்காய்ந்த முதலை... வீடியோவால் மக்கள் அச்சம்!

Mar 1, 2024 - 20:55
ஐயா ஜாலி வெயிலு! ஹாயாக வெயில்காய்ந்த முதலை... வீடியோவால் மக்கள் அச்சம்!

பாபநாசத்தில் உள்ள காரையார் அணையில், முதலை ஒன்று நீந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது. 

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் அணை பிரதான அணை ஆகும். 143 அடி கொண்ட இந்த அணை, தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கன மழையால் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 140 அடிக்கு மேல் உயர்ந்தது. ஆனால், தற்போது மழை நின்று, வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்படுகிறது. 

இதனால், அணையின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் போதும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள போதும் அணையிலுள்ள முதலைகள் அவ்வப்போது கரைப்பகுதிக்கு வந்து செல்கின்றன. இதை முன்கூட்டியே அறிந்த மாவட்ட நிர்வாகம், எச்சரிக்கைப் பலகை ஒன்றையும் வைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது காரையார் அணையின் நீர்மட்டம் பார்க்கக்கூடிய பகுதியில், தண்ணீரின் மேற்பரப்பில் முதலை ஒன்று ஓய்வெடுத்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். இதனை கண்ட முதலை தண்ணீரில் பின்னோக்கி சென்று சிறிது நேரத்தில் மாயமானது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow