பட்டாசு ஆலை வெடி விபத்தில் இந்த ஆண்டில் 52 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 17 பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் நடைபெற்று 52 பேர் உயிரிழந்துள்ளதாக பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்தில் சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், சென்னைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை இணைந்து பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்தினை நடத்தினர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சம்கள்,தொழிற்சாலை சட்டங்கள், வெடிபொருள் சட்டம், படைக்கல சட்டம் மற்றும் பட்டாசு உற்பத்தி பாதுகாப்பில் நிர்வாகத்தின் பங்கு, தொழிலாளர்களின் பங்கு, சட்ட விரோத பட்டாசு தயாரிப்பை தடுக்கும் வழிகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளதாகவும், தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தீவிர உற்பத்தி நடைபெறும் போது, அதிக கவனத்தில் உற்பத்தியைக் கையாள வேண்டும் என்றும் பயிற்சி முறைகளை அறிந்து வேதிப்பொருள்களின் தன்மையை புரிந்து கொண்டு பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதனை அடுத்து பேசிய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த்,
மற்ற விபத்து போல் இல்லாமல் பட்டாசு வெடிவிபத்தில், விபத்து தொடர்ந்து நடைபெறமால் இருக்கவும் தடுக்கவும் நேரம் கிடையாது என்றும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றுவதே விபத்தை தடுக்கும் என்று கூறினார். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்தகாலத்தில் நடந்த 20 விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில் 6 விபத்துகள் வேதிப்பொருள் சிதைவின் காரணமாக ஏற்பட்டதாகவும், மற்ற விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் மனிதத் தவறுகளால் நடந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற 17 விபத்துகளில் 52 பேர் உயிரிழந்தனர் என்றும் அவற்றுள் 12 விபத்துகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று 42 பேர் உயிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?