”முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் இதுதான்..” மனம் திறந்த கெஜ்ரிவால்

தேசிய அரசியலை மாற்றவே டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Sep 22, 2024 - 13:24
”முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் இதுதான்..” மனம் திறந்த கெஜ்ரிவால்

தேசிய அரசியலை மாற்றவே டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு ஜாமின் வழங்கியது. ஆனால் ஜாமின் நிபந்தனைகளாக முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது, முதல்வர் கோப்புகளை கையாளக் கூடாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனால் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து டெல்லியில் கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய கெஜ்ரிவால், செப்டம்பர் 17ஆம் தேதி தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் முன்கூட்டியே நவம்பரிலும் தேர்தல் நடத்த பரிந்துரைப்போம். அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிரடியாக அறிவித்தார்.

இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர் அதிஷி பெயரை முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். இதனையடுத்து அதிஷி ஒருமனதாக, புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநரை சந்தித்து தமது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்தார்.

டெல்லி முதலமைச்சராக பதவியேற்கும் 3ஆவது பெண் அதிஷி மர்லேனா ஆவார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித்தை தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக கடந்த 21ஆம் தேதி அதிஷி பதவியேற்றார்.

குடியரசுத்தலைவர் உத்தரவிட்ட பின்னர் அதிஷியும் அவரது அமைச்சரவையும் பதவியேற்கும். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும். ஆகையால் அடுத்த 6 மாத காலத்துக்கு மட்டுமே அதிஷி முதல்வராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மக்களின் நீதிமன்ற நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக நேர்மையான அரசியலில் ஈடுபட்டதாகவும், மின்சாரம்-தண்ணீர்-கல்வியை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததாகவும் கூறினார். எதிர்கட்சியினரின் நேர்மையை தாக்க முடிவெடுத்த பிரதமர் மோடி, ஆம்ஆத்மி நிர்வாகிகளை கூண்டோடு சிறையில் அடைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஊழல் செய்யவோ பணம் சம்பாதிக்கவோ பதவியில் நீடிக்கவில்லை எனவும் தேசிய அரசியலை மாற்றவே ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அதிஷி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow