பஞ்சாயத்துத் தலைவி மீது கொலை முயற்சி - 6 பேருக்கு இரட்டை ஆயுள்
திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து பஞ்சாயத்து தலைவியைக் கொல்ல முயன்ற வழக்கில் பிரபல ரவுடி ஜேக்கப் உட்பட ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை தீண்டாமை வன்கொடுமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லையை அடுத்த வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர், மின்வாரியத் துறை ஊழியர் பொய்யாமணி. அவருடைய மனைவி கிருஷ்ணவேணி (51). இவர், 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வடக்கு தாழையூத்துப் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வந்தார்.
இவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் உட்பட பலர் தங்களுக்குப் பொது கழிப்பிடம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அப்போது பஞ்சாயத்துப் பொது நிதியில் போதிய இருப்பு இல்லாததால் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில், பொது கழிப்பிடம் அமைக்கக்கோரி கேட்டுள்ளார். ஆனால் அங்கும் போதிய இருப்பு இல்லை என தெரிவித்ததையடுத்து கலெக்டர் அலுவலகத்திலும் கலெக்டரின் 'செல்ஃப்' நிதியில் பொதுக் கழிப்பிடம் கட்டித் தரக் கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த நிதி வேறொரு பஞ்சாயத்திற்கு ஒதுக்கப்பட்டதால் பொது கழிப்பிடத்திற்கு நிதி கேட்டு தனியார் சிமெண்ட் நிறுவனத்தை அணுகி உள்ளார்.
அந்த நிறுவனத்தினர் பொதுக் கழிப்பிடம் கட்டித் தர சம்மதம் தெரிவித்ததையடுத்து வடக்குத் தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஓடைப் புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து உள்ளார். ஆனால் அங்கு பொதுக்கழிப்பிடம் கட்ட மேலதாழையூத்தை சேர்ந்த பால் வியாபாரியும் அப்போதைய கவுன்சிலருமான சுப்பிரமணியன்(59) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜேசிபி எந்திரத்துடன் பொது கழிப்பிடம் அமைக்க வந்த தனியார் நிறுவனத்தினரையும் சுப்பிரமணியன் விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுக் கழிப்பிடம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் கிருஷ்ணவேணி தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்து பொதுக்கழிப்பிடம் அமைக்க முயற்சிகளை எடுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் கிருஷ்ணவேணியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்தநிலையில் கிருஷ்ணவேணி 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி ஆட்டோவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றார். ஆட்டோவை வளதி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். ஆட்டோ வடக்கு தாழையூத்து கருப்புசாமி கோவில் அருகே சென்ற போது ஒரு கும்பல் கொலை வெறியுடன் அரிவாள் உருட்டு கட்டையுடன் ஓடி வந்துள்ளது. இதைப் பார்த்து பயந்த வளதி ஆட்டோவை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தாழையூத்து காவல் நிலையத்திற்குச் சென்றார்.
கிருஷ்ணவேணி ஆட்டோவில் இருந்து பேக்கை எடுத்துவிட்டு இறங்குவதற்குள் அந்தக் கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது. இதில் அவரது வலது காது துண்டானது. இரண்டு விரல்கள் துண்டானது. இடது தோள்பட்டை மற்றும் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கினார். கிருஷ்ணவேணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. கிருஷ்ணவேணி மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். அரிவாள் வெட்டு கழுத்தில் பலமாக விழுந்ததால் அவரால் தலையை தூக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரது கால் கணுக்கால் நரம்பை எடுத்து கழுத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தாழையூத்து போலீசாரின் விசாரணையில் கிருஷ்ணவேணியை அரிவாளால் வெட்டியது சுப்பிரமணியன் என்பதும், அவரது வீட்டுக்கு அருகே பொது கழிப்பிடம் கட்ட முயன்றதால் அவர் அவரது உறவினர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கிருஷ்ணவேணியைக் கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுப்பிரமணியன் (60), அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுல்தான் மைதீன் (59) ஆகிய 2 பேரைக் கைது செய்தனர். மற்ற குற்றவாளிகள் அப்போது தலைமறைவாகி இருந்தனர். இதனால் அவர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சில நாட்களில் வள்ளியூர் நீதிமன்றத்தில் பிரபல ரவுடி ஜேக்கப் (33), ஆறுமுகம் மகன் கார்த்திக் (34), மரிய அலங்காரம் மகன் விஜயராம மூர்த்தி (34), தர்மராஜ் மகன் பிரவீன்ராஜ் (32) ஆகிய 4 பேர் சரணடைந்தனர். மேலும் நடராஜன், சுப்பிரமணியனின் சகோதரர்களான ராம கிருஷ்ணன், சந்தனமாரி ஆகியோருடன் மொத்தம் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது நடராஜன் உயிரிழந்தார். போதிய சாட்சியங்கள் இல்லை எனக்கூறி சுப்பிரமணியனின் சகோதரர்களான ராம கிருஷ்ணன், சந்தனமாரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தாழையூத்து போலீசார் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், ஜேக்கப், கார்த்திக், விஜய் ராமமூர்த்தி, பிரவீன்ராஜ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் ஆதாரப் படுத்தப்பட்டனர்
தாழையுத்து பஞ்சாயத்துத் தலைவியை கொல்ல முயன்ற வழக்கில் பிரபல ரவுடி ஜேக்கப் உட்பட ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை தீண்டாமை வன்கொடுமை நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. குற்றவாளிகள் ஐந்து பேருக்கு தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரவீன் ராஜ் என்ற குற்றவாளிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை அபராதம் விதிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத் தொகையான மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணிக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?