விசாரணைக்கு சென்ற பேராசிரியர் பற்களை உடைத்த காவல் ஆய்வாளர்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மனிதாபிமானம் இல்லாமல், பட்டியல் சமூகத்தைச் சமூகத்தை சார்ந்த பேராசிரியர் ஆறுமுகத்தை பழிவாங்கும் நோக்கில் ஆய்வாளர் சுகுமாரன் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் பற்கள் உடைத்த கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, மோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ஆறுமுகம். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் ஆய்வாளர் சுகுமாரன் தலைமையிலான கந்தர்வகோட்டை காவல்துறையின் சமூக விரோத போக்கை கண்டித்தும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 2 பேரின் இறப்பிற்கு நீதி கேட்டும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கடந்த 14ம் தேதி பேராசிரியர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தனர்.
கந்தர்வகோட்டை காவல்துறை வழக்கம் போல் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்த கந்தர்வகோட்டை ஆய்வாளர் சுகுமாரன், பேராசிரியர் ஆறுமுகத்தின் முன் விரோதியான அதே ஊரைச் சேர்ந்த சிவசாமி மனைவி புஷ்பம் என்பவரை தூண்டிவிட்டு, கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பொய் புகார் ஒன்றை கொடுக்கச் செய்துள்ளார்.
புகாரின் பேரில் ஆய்வாளர் சுகுமாரன் உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் பேராசிரியர் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் தகாத வார்த்தைகளை கூறி அவமானப்படுத்தி காவல் நிலையத்திற்கு இழுத்து வந்ததாக கூறப்படுகிறது.பின்னர் சிவசாமி மனைவி புஷ்பம் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அன்று இரவே கந்தர்வகோட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது பேராசிரியர் ஆறுமுகத்தை விசாரணை செய்த நீதிபதி சொந்த ஜாமீனில் ஆறுமுகத்தை விடுதலை செய்துள்ளார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன், பேராசிரியர் ஆறுமுகத்தை மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து, ஜாதி பெயரை கூறி, பூட்ஸ் காலால் முகத்தில் தாக்கியுள்ளார்.இதனைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் உட்பட மற்ற காவலர்களும் பேராசிரியர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் பேராசிரியர் ஆறுமுகத்தின் உடலில் பலத்த உள் காயம் ஏற்பட்டதோடு, கீழ் தாடையில் முன் வரிசையில் உள்ள நான்கு பற்கள் உடைக்கப்பட்டு, நிலைகுலைந்து காவல் நிலைய வாசலில் கிடந்துள்ளார்.
கந்தர்வகோட்டை காவல்துறையினரின் வெறிச்செயலால் செய்வதறியாது திகைத்து நின்ற பேராசிரியர் ஆறுமுகத்தின் குடும்பத்தினர் காவல்துறையினரின் மிரட்டலுக்கு பயந்து அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மனிதாபிமானம் இல்லாமல், பட்டியல் சமூகத்தைச் சமூகத்தை சார்ந்த பேராசிரியர் ஆறுமுகத்தை பழிவாங்கும் நோக்கில் வேண்டுமென்றே பொய் புகார் கொடுக்கச் செய்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அப்போதும் வெறி அடங்காத ஆய்வாளர் சுகுமாரன் பேராசிரியர் ஆறுமுகத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
எனவே காவல் ஆய்வாளர் சுகுமாரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஆறுமுகத்தின் உறவினர்கள் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளரால் பேராசிரியர் ஆறுமுகத்தின் பற்கள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான துரைகுணா கூறுகையில், “காவல் ஆய்வாளர் சுகுமாரன் கடந்த வருடம், திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய போது, புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததன் பேரில், விசாரணை நடத்தப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர் என்றும், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்ட சுகுமாரன், கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை, ஒயின்ஷாப் பார் இப்படி எண்ணற்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்து அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டுள்ளார் என்றும், கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் சாமானிய மனிதர்களை மிரட்டுவது, அவதூறாக பேசுவது, சாதி பெயர்களைக் கூறி அவமானப்படுத்துவது, அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி ஆபாசமான முறையில் பேசுவது என எல்லா குற்றச்செயல்களையும் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தான், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் உறவுக்காரர் என்றும், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், கூறி அனைத்து விதமான சமூக விரோத செயல்களையும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தொடர்ச்சியாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தமிழக காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் காவல் ஆய்வாளர் சுகுமாரன் மீது தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்தி காவல்துறையிலிருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?