நிற்காத பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்-பள்ளி மாணவர்கள் அவதி
கூடுதல் பேருந்துகளை இயக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை மர்ம நபர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே, நத்தாமூர் கிராமத்திற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு குறைவாக பேருந்துகள் இயக்கப்படுவதால், அலுவல் நேரங்களில் வரும் ஓரிரு பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். அப்படி காலை 8 மணியளவில் கிளம்பிய அரசுப் பேருந்து ஒன்று, 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை துரைராஜ் என்பவர் இயக்கி வந்த நிலையில், 8.30 மணியளவில் ஆத்தூர் என்ற கிராமம் வழியாக வந்த பேருந்து, நிற்காமல் சென்றது.
இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர் ஒருவர், பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை சாலையிலேயே நிறுத்தினார். பேருந்தில் இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலையில் இறக்கி விடப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, பள்ளி மற்றும் அலுவல் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?