சட்டப்பேரவையில் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு இரங்கல்

எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Feb 13, 2024 - 11:53
Feb 13, 2024 - 12:24
சட்டப்பேரவையில் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு இரங்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு இன்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நிமிடங்களில் தனது உரையை முடித்துக்கொண்டார். முன்னதாக பேசிய அவர், சட்டப்பேரவை தொடங்கும் முன்பாகவும், முடியும் போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லை என்று குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள உரையில் உள்ளதை தகவல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் ஏற்க முடியாததாக இருப்பதாகவும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் எனவும் அவர் கூறினார். பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, சாவர்க்கர் குறித்து பேசி முடித்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். மேலும் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்து இருந்தது தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. இதில் தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மறைந்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது. இதில் உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதியின்மை போன்ற கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow