கல்லூரி மாணவர்கள் மோதல்-ரணகளமான ரயில்நிலையம்

தகராறில் ஈடுபட்டவர்களில் மாநிலக் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Feb 14, 2024 - 13:35
Feb 14, 2024 - 21:16
கல்லூரி மாணவர்கள் மோதல்-ரணகளமான ரயில்நிலையம்

சென்னையை அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் தொடர்பாக 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு என்பது வெகு காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று சென்னை கடற்கரையில் இருந்து, அரக்கோணம் நோக்கி புறப்பட்டுச் சென்ற மின்சார ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தப்போது கற்கள் மற்றும் பாட்டில்களுடன் காத்திருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அச்சமடைந்த பயணிகள் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வருவதை கண்ட மாணவர்கள், அங்கிருந்து நாலாபுறம் சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

இந்த நிலையில், தகராறில் ஈடுபட்டவர்களில் மாநிலக் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்களை போலீசார் இன்று(14.02.2024) கைது செய்தனர். ரயில் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மீதமுள்ள மாணவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மோதல் தொடர்பான வீடியோ காட்சிகளை இரண்டு கல்லூரி நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow