"திருவிளக்கு பூஜையில் பாரபட்சம்".. குன்றத்தூர் முருகன் கோயில் நிர்வாகிகள் மீது பட்டியலின மக்கள் குற்றச்சாட்டு..
குன்றத்தூர் முருகன் கோயில் விளக்கு பூஜையில் பட்டியலின மக்களை கோவில் நிர்வாகம் அனுமதிக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குன்றத்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருநாளை முன்னிட்டு 508 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சித்திரை திருநாளையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் குன்றத்தூர் அருகே உள்ள நத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருவிளக்கு பூஜையில் கலந்துகொள்வதில், அறங்காவலர்களும், கோயில் அதிகாரிகளும் பாரபட்சம் காட்டியதாக குற்றஞ்சாட்டினர். மேலும் இது தொடர்பாக கோயில் வளாகம் முன்பு பேனர் வைத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோயில் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
What's Your Reaction?