ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட்.. விசாரணை அதிகாரி திடீர் நீக்கம்.. பின்னணி என்ன..?

Apr 21, 2024 - 16:11
ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட்.. விசாரணை அதிகாரி திடீர் நீக்கம்.. பின்னணி என்ன..?

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்பாராத திருப்பமாக அந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரியே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைது செய்து விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணிப்பரிமாற்ற புகாரில் அமலாக்கத்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஜாபர் ஜாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர், தொழில் கூட்டாளி அப்துல் பாஷித் புகாரி உள்பட பலரும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர். அமீர், அப்துல் பாஷித் புகாரி ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதனிடையே பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த பின் கிடைக்கக்கூடிய ஹவாலா பணத்தை, சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர் ஒருவரிடம் மாற்றி, பின்னர் அந்த பணத்தை ஜாபர் சாதிக்கிற்கு கைமாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வரும் பணத்தை மாற்றி கொடுத்து வந்ததும் ஆய்வில் தெரியவந்ததையடுத்து, அந்த புரோக்கருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கை, மத்திய  போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் என்பவர் விசாரணை நடத்தி வந்தார். ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டபோது வழக்கின் விவரங்களை மறைத்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த புகார் குறித்து, மத்திய  போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கு மண்டல தலைமை துணை இயக்குனர் மணீஷ்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞானேஸ்வர் சிங், தான் வகித்து வந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மத்திய ஊழல் தடுப்பு அதிகாரி பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய போதைப்பொருள் தடுப்பு  பிரிவின் தலைமை இயக்குநர் எஸ்.என்.பிரதானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் புதிய அதிகாரியாக போதைப்பொருள்  தடுப்பு பிரிவின் சிறப்புப்படை அதிகாரியாக பணியாற்றி வரும் நீரஜ் குப்தா 3 மாத காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக உத்தரவை பிறப்பித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவராகவும் நீரஜ் குப்தா இருப்பார் எனவும் அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது போன்று சுழற்சி முறையில் பதவி மாற்றம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறைதான் எனக் கூறப்பட்டாலும்,  ஞானேஸ்வர் சிங்கின் பதவி நீக்கத்துக்கான காரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow