பெங்களூர் பெண்ணிடம் காதலிப்பதாக கூறி கர்ப்பமாகி ஏமாற்றி கருக்கலைப்பு செய்த இளைஞர் கைது
தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றிய 30 வயது இளைஞரை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் அழகுக்கலை நிபுணராகப் பணியாற்றி வரும் 25 வயது இளம்பெண், கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தனது தோழியின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றார். அப்போது சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அயூப் அக்ரம் (30) என்பவருடன் அவருக்கு அறிமுகம் கிடைத்தது.
இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. தனது சமூக வலைதள பக்கத்தையும் செல்போனில் பகிர்ந்து கொண்டு பழக ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. தாயை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அந்தப் பெண்ணிடம், தான் அவரைத் திருமணம் செய்துகொள்வதாக அக்ரம் ஆசை வார்த்தைகளைக் கூறியதாக தெரிகிறது. இதனை உண்மை என நம்பிய அந்தப் பெண், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் அக்ரமுடன் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். இந்த தகவலை அக்ரமிடம் தெரிவித்தபோது, திருமணத்தைப் பற்றிப் பேசி அவரைச் சமாதானப்படுத்தி பெங்களூருவிற்கு அனுப்பி வைத்துள்ளார். பெங்களூரு சென்ற அவருக்குத் திடீரென கடும் வயிற்று வலி ஏற்படவே, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அக்ரமிடம் முறையிட்டபோதுதான், அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட அதிர்ச்சித் தகவல் அந்தப் பெண்ணிற்குத் தெரியவந்தது. தனது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அனுப்பி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கர்ப்பம் கலைவதற்கு மாத்திரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து அக்ரம் தவிர்க்க ஆரம்பித்தது மட்டுமல்லாது, திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அணுகும் பொழுது பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அயூப் அக்ரமை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
What's Your Reaction?

