எம்.ஜி.ஆர் குறித்து ஆ.ராசா பேசியதை தவிர்த்திருக்கலாம் - எம்.பி. திருநாவுக்கரசர்
கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்து பணி நிறைவாக செய்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு கிடையாது - எம்.பி. திருநாவுக்கரசர்
மக்களவையின் கடைசி கூட்டத்தொடரின்போது பிரதமர் ஆணவத்தோடு பேசியது மட்டுமல்லாமல், காங்கிரசை சபிக்கும் விதமாக பல்வேறு விமர்சனங்களை வைத்திருப்பது வேதனைக்குரியது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் கூறுகையில், "நாம் தமிழர் கட்சி பல ஆண்டு காலமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளின் படத்தை வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இது புலிகளுக்கு இன்னும் ஆதரவு உள்ளது என்பதை தான் காட்டுகிறது. அப்போதெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டு தற்போது கட்சி நிர்வாகிகள் இல்லங்களில் சோதனை நடத்துவது என்பது சரிதானா?" என்றார். இது தேர்தலுக்காக நடந்துள்ளதா? என்ற சந்தேகமும் எழுவதாக அவர் வினவியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ள கட்சிகள், கூட்டணி நிலைப்பாடு பற்றி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டு, பின்னர் எங்கள் கூட்டணி குறித்து பேசட்டும் எனக் கூறிய அவர், காங்கிரஸ் - திமுக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததே தவிர, தொகுதி பங்கீடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பாரத் ரத்னா விருது கொடுக்கும் இப்போதைய நேரம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாரத ரத்னா விருது கொடுத்ததில் தவறில்லை. ஆனால் விருது கொடுக்கப்பட்ட நேரம் தான் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.அதேநேரம், விருது பெரும் தலைவர்களை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.தேர்தல் குறித்து பல்வேறு கருத்துக்கணிப்புகள் வருகிறது.மக்கள்தான் எஜமானர்கள். இறுதியில் தான் முடிவு தெரியும்.பாஜக தலைவர் அண்ணாமலையால் தோழமை கட்சிகளை கூட தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அவரால் தான் கூட்டணியை விட்டு போவதாக அவரது கூட்டணியில் இருந்த தலைவர்களே தெரிவித்துள்ளனர்.
60 வருட அரசியல் பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு அரசியல் குறித்த புரிதல் அண்ணாமலைக்கு இல்லை என நினைக்கிறேன். எனது அரசியல் அனுபவத்தில் இந்த 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியது திருப்தி இல்லாமல் உள்ளது.மீண்டும் திருச்சியில் போட்டியிட விரும்புகிறேன்.ஆனால் அதை நானே சொல்ல முடியாது. எங்கள் தலைமை மற்றும் திமுக கூட்டணிதான் முடிவு எடுக்க வேண்டும்.
நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டு காலம் ஆகிறது. இதுவரை 13 தேர்தலில் சந்தித்து மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், எம்.பி. ஆகவும் இருந்துள்ளேன். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்.பி. ஆக இருந்து பணி நிறைவாக செய்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு கிடையாது.மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்கள் செய்வதற்கு போதிய நிதி எம்.பி-க்களுக்கு வழங்கவில்லை.எம்.பி.க்கள் மக்கள் பிரச்னைகளை கூறினால் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை போன்ற காரணங்களால் திருப்தி இல்லாத சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.
மறைந்த தலைவர்கள் குறித்து தனிப்பட்ட விமர்சனம் செய்வதை தவிர்க்கலாம் என்பது என் கருத்து. கடைசி கூட்டத்தொடரின்போது பிரதமர் ஆணவத்தோடு பேசியது மட்டுமல்லாமல்,காங்கிரசை சபிக்கும் விதமாக பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளது வேதனைக்குரியது" என்று தெரிவித்தார்.
What's Your Reaction?