ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு - உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்
நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவன வங்கி கணக்குகள், அந்த கணக்குகளில் உள்ள பண விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
ரூ.1,000 கோடிக்கு மேல் நடைபெறும் நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனம், தமிழகம் முழுவதும் கூடுதல் வட்டி, பணம் இரட்டிப்பு, பணத்துக்கு ஈடாக வீட்டடி மனை தருவதாக கூறி பல ஆயிரம் பேரிடம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நியோ மேக்ஸ் இயக்குனர்கள் கமலக்கண்ணன், சைமன் ராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் நிதி நிறுவன இயக்குநர் உள்பட பலர் ஜாமீன் பெற்று உல்லாசமாக வலம் வந்து கொண்டிருப்பதாகவும், ஆகவே இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி விருதுநகரைச் சேர்ந்த ரவிசங்கர் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நம்பி செல்வன், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 26 நிறுவனங்களின் வங்கி கணக்கு பரிமாற்றம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 5 முக்கிய வங்கி கணக்குகளில் இருந்த 40 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைக்கேட்ட நீதிபதி, இது போன்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ஏமாறும் மக்களின் நிலை வேதனையை ஏற்படுத்துவதாகவும், மோசடி செய்தவர்கள் தப்பிச்செல்லாமல் இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்யும் எனக் கூறினார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், இதுபோன்ற பெரிய மோசடி வழக்கிற்காக வழக்கறிஞர், ஆணையர்களை நியமனம் செய்தது தவறு என்றும், இது வினோதமாகவும், ஆச்சிரியமாகவும் உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படும். நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவன வங்கி கணக்குகள், அந்த கணக்குகளில் உள்ள பண விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?