ஆந்திராவில் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்... உஷார் நிலையில் தமிழக அதிகாரிகள்!

ஆந்திரமாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதை அடுத்து, தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்கள் மீது கால்நடை மருத்துவக் குழுவினர் கிருமி நாசினி தெளித்து, கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக கோழிப் பண்ணைகளில் நோய் பாதித்த கோழிகளை உரிமையாளர்கள் அழித்து வருகின்றனர். மேலும், நோய் தாக்குதலுக்கு உள்ளான பண்ணைகளைச் சுற்றி 10 கிலோ மீட்டர் அளவுக்குக் கோழி இறைச்சிகளை விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன் பாடி சோதனை சாவடி வழியாக வட மாநிலம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்து, அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அதேநேரம், பறவை காய்ச்சல் குறித்து தமிழகத்தில் எந்த அச்சமும் தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






