சிறைக்கு போக நான் தயார்... ஆனா நீங்களா தீர்ப்பு எழுதாதீங்க! இயக்குநர் அமீர் பேச்சு

போதை மன்னன் ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கியிருக்கும் இயக்குநர் அமீர், சிறைக்குப்போக நான் தயார் ஆனால், நான் வெறுக்கிற போதைப்பொருள் குற்றத்துக்காக நான் சிறை செல்ல மாட்டேன் என்றும், வழக்கு குறித்து தீவிரமாக விசாரிக்காமல் தீர்ப்பெழுதாதீர்கள் என்றும் ஆவேசமாக பேசினார். 

May 4, 2024 - 22:03
சிறைக்கு போக நான் தயார்... ஆனா நீங்களா தீர்ப்பு எழுதாதீங்க! இயக்குநர் அமீர் பேச்சு

ஆதம்பாவா இயக்கத்தில் அவரது மூன் பிக்சர்ஸ் தயாரிக்கும் உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் இயக்குநர் அமீர் கதாநாயகாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வழக்கு குறித்து மேடையில் பேசினார். அப்போது, ராமாயணத்தில் சீதை அக்னியில் இறங்கி தான் குற்றமற்றவர் என்று நிரூபித்தார். நான் வாராவாரம் நிரூபித்து வருகிறேன் என்று பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், என்னை சந்தேகப்படுவதில் எந்தத் தப்பும் இல்லை ஆனால் தீவிரமாக விசாரிக்காமல் நீங்களாக தீர்ப்பு எழுதாதீர்கள் என்று பேசினார். சிறைக்குச் செல்ல நான் தயார் என்று கூறிய அமீர், ஆனால் நான் வெறுக்கும் போதைப் பழக்கத்தில் தொடர்புடைய வழக்குக்காக சிறைக்குச் செல்ல மாட்டேன் என்றும், போதை சமூகத்தை சீரழிக்கிறது என்றும் பேசினார். டெல்லியில் தன்னிடம் என்.சி.பி விசாரணை நடத்தியதை பற்றியும் அமீர் பேசினார். 

டெல்லியில் என்னிடம் என்.சி.பி அதிகாரிகள் கண்ணியமாக விசாரித்தனர். சில கடினமான கேள்விகளை கேட்டது மனதை காயப்படுத்தியது. ஆனால் அது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் யுக்தி என்பது எனக்கும் தெரியும் என்று பேசினார். என்னிடம் நேர்மையும் உண்மையும் உள்ளது. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறிய அவர், என் நண்பர்களும் குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்று கூறினார். 

இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கிடம் பணம் எப்படி வந்தது என்று நான் ஏன் கேட்கவில்லை என்று அதிகாரிகள் கேட்டார்கள் என்று கூறிய அமீர், இதே கேள்வியை லைகா நிறுவனத்தின் கீழ் படம் பண்ணும் ரஜினியிடமோ, கமலிடமோ ஏன் கேட்கவில்லை என்று எதிர் கேள்வி கேட்டார். மேலும், பாரத் மாதா கி ஜெய் என்றும் ஸ்ரீராம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது இறைவன் மிகப்பெரியவன் என்றுதான் அடிக்கடி உச்சரிக்கிறார்கள் என்று கிண்டலடித்த அமீர், உண்மையிலேயே இறைவன் மிகப்பெரியவன் என்று கூறி பேசி முடித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow