மாணவர்களை செருப்பால் அடித்த ஆசிரியர்... காரணம் இதுதானாம்..!
தூத்துக்குடியில் அரசு பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் செருப்பால் அடித்த அவலம் அரங்கேறியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பியபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 45 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியர் விடுமுறை தினங்களில் தங்களது பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்க சென்றதால் 7 மாணவர்களை அடித்தாக, மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் ராதிகா கூறுகையில், தனது குழந்தைகள் உட்பட 7 மாணவர்களை ராதாகிருஷ்ணன் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமின்றி அவர், படிக்காத மாணவர்களை செருப்பால் அடிப்பதாகவும், எனவே ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அந்த பள்ளியில், நிரந்தரமான தலைமை ஆசிரியர் இல்லை எனவும், இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஒரு ஆசிரியராக என் கடமையைத்தான் செய்தேன்; என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்படி பதில் சொல்வேன்” எனக் கூறினார்.
சமீப காலமாகவே பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வன்முறை எண்ணங்கள் மேலோங்கத் தொடங்கியுள்ளன. சக மாணவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டுவது, மாணவர்களின் சாதிப் பெயரைச் சொல்லி ஆசிரியர் திட்டுவது, ஆசிரியரைக் கத்தியைக்காட்டி மாணவர்கள் மிரட்டுவது என இதுபோன்ற கொடூர எண்ண ஓட்டங்கள் கல்வி நிலையங்களில் நிலவத் தொடங்கியுள்ளது. இவற்றுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு களையப்படவேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?