ஏலம் விடும் இந்தியா கூட்டணி.. மு.க ஸ்டாலின் பிரதமராவார்.. ஆருடம் சொன்ன அமித் ஷா.. எப்படி தெரியுமா?
இந்தியா கூட்டணிக்குள்ளேயே பிரதமர் நாற்காலிக்கு ஏலம் நடக்கிறது என்று அமித் ஷா விமர்சித்தார்.
இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று கூறி கலாய்த்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்டாலின்கூட ஒரு வருடம் பிரதமர் ஆவார் என்றும், ஓராண்டு எஞ்சினால் ராகுல் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைக்கும் என்றும் நக்கலடித்துள்ளார்.
நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. அடுத்தடுத்த கட்டங்களுக்காக அரசியல்கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. நாட்டில் குறிப்பாக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸை தலைமையாகக் கொண்ட இந்தியா கூட்டணிக்கும்தான் பெரும்பான்மையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதற்கு முன்னதாக தனியார் செய்தி ஊடகத்திற்கு அவர் பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது, பேசிய அவர் நம் நாடு எந்தத் துறையிலும் ஸ்திரத்தன்மையை எட்ட முடியாமல் 30 ஆண்டுகள் தவித்ததாகக் கூறினார். ஆனால், கடைசி 10 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் வலுவான ஸ்திரத்தன்மையை நாடு அடைந்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். அரசியலில் மட்டுமின்றி, கொள்கை மற்றும் வளர்ச்சியின் அடிப்படையிலும் நாடு வலுவடைந்திருக்கிறது என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
அதன்பின் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒருவரை பிரதமராக நியமிப்பார்கள் என்றார். அந்தக் கூட்டணி இப்போதிருக்கும் நிலைமையில், முதலில் சரத்பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார், பின்னர் மமதா பானர்ஜி ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார், அதன் பின் ஸ்டாலின்கூட ஒரு வருடத்திற்குப் பிரதமராக இருப்பார் என்று கூறி கிண்டலடித்தார். அதற்குப் பிறகு ஏதேனும் எஞ்சினால்தான் ராகுல் பிரதமராக அமர்த்தப்படுவார் என்றும் அமித் ஷா நக்கலடித்தார். ஆனால், ஒரு நாட்டை அப்படி நடத்த முடியாது என்று கூறிய அமித் ஷா, இந்தியா கூட்டணிக்குள்ளேயே பிரதமர் நாற்காலிக்கு ஏலம் நடக்கிறது என்றும் விமர்சித்தார்.
What's Your Reaction?