கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதி... மகனுக்காக தந்தையின் பாசப் போராட்டம்...மூக்கை கடித்த மச்சான்கள்...
கன்னியாகுமரியில், கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்த நிலையில், மகனை காண ஆவலுடன் வந்த தந்தையை, மைத்துனர்கள் அடித்து உதைத்ததுடன், அவரது மூக்கையும் கடித்ததாக கூறப்படுகிறது. மகனை காண தந்தை நடத்திய பாசப் போராட்டம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் பிபின் பிரியன். பட்டதாரியான இவரும், திருவட்டாரை அடுத்த பிலாங்காலை பகுதியைச் சேர்ந்த ஜெபப்பிரியா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற ஜெபபிரியா, மகனுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், மகனை காண, அடிக்கடி மாமியார் வீட்டிற்கு பிபின் பிரியன் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி, சமீபத்தில் மகனை பார்க்க பிபின் பிரியன் சென்றபோது, மாடி அறையில் மகன் இருந்தது தெரியவந்தது. மேலும், தந்தையை பார்க்க விடாதபடி மகனை அவர்கள் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாடி ஏறி குதித்து மகனை பார்க்க சென்ற பிபின் பிரியன், அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து, கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட மகனை காண பாச போராட்டம் நடத்தியுள்ளார்.
அப்போது, தந்தையை கண்ட மகன், அப்பா.. அப்பா.. என கதறியது காண்போரை கண்கலங்க செய்கிறது. தந்தையை கண்டதும், தான் இருந்த அறையை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்ட சிறுவன், தந்தையுடன் சிறிது நேரம் பேசியுள்ளான். மகனுடன் சேர்ந்து வாழ முடியாததை எண்ணி கண்ணீர் வடித்த பிபின் பிரியன், கதறியுள்ளார்.
இந்த நிலையில், ஜெபப்பிரியாவின் அண்ணன்கள், சிறுவன் இருந்த அறையை திறக்க முயன்ற போது, சிறுவன், அவங்கள விரட்டுங்க அப்பா என்று கூறியுள்ளான்.. தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று மகனிடம் பிபின் பிரியன் புலம்பி உள்ளார்.
இதனிடையே, ஜெயப்பிரியாவின் அண்ணன்கள் கதவை வேகமாக தட்டியுள்ளனர். இதனால் பிபின் பிரியனும், மகனும் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்துள்ளனர். அப்போது, கதவை திறந்தால் அப்பாவை பார்க்க விடமாட்டாங்க என பிபின் கதறி உள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த சிறுவன், தெரியாமல் தாழ்பாளை திறந்துள்ளான். இதையடுத்து உள்ளே புகுந்த ஜெயப்பிரியாவின் அண்ணன்கள் இருவரும், சிறுவனை அந்த அறையில் இருந்து வேறு அறைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
அதோடு நிற்காமல், பிபின் பிரியனை தாக்கிய மைத்துனவர்கள் இருவரும், அவரது மூக்கை கடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரை கயிற்றால் கேட்டில் கட்டிவைத்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிபின் பிரியனை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனைக் காண பாசப் போராட்டம் நடத்திய தந்தையை, மனைவி வீட்டார் அடித்து விரட்டிய சம்பவம், காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
What's Your Reaction?