வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை... இன்று இறுதி செய்யப்படுமா தொகுதி பங்கீடு..?

மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மாலை டெல்லி செல்லவுள்ள நிலையில், இன்று மாலையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. 

Mar 21, 2024 - 14:51
வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை... இன்று இறுதி செய்யப்படுமா தொகுதி பங்கீடு..?

2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 2-வது நாளாக இன்று (மார்ச் 21) பாஜக மாநில தலைமை அலுவலகலமான கமலாலயத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டன. நாளை (மார்ச் 22) பாஜகவின் உயர்மட்ட மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் பாஜக தலைமையகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, வேட்பாளர்கள் பட்டியலுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 21) மாலை டெல்லி செல்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்து மொத்தம் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக களம் காண்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் :-

பாமக - 10 
புதிய நீதிக் கட்சி - 1
அமமுக - 2
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 1
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - 1 (மதுரை)
இந்திய ஜனநாயக கட்சி - 1
தமிழ் மாநில காங்கிரஸ் - 3 

என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகள் உட்பட 24 தொகுதியில் தாமரைச் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலுடன் டெல்லி செல்லும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேச.விநாயகம் ஆகியோரும் செல்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow