அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு...விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்..
குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநரிடம் அனுமதி கோரி, மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கடிதமும் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சி.விஜயபாஸ்கர் மற்றும் ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ விசாரணை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கு மத்திய புலனாய்வு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் எனவும், ஒப்புதல் அளித்த கோப்புகள் சிபிஐ-யின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாதங்களை பரிசீலித்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?