தமிழகத்தில் 100 மரகதப் பூஞ்சோலைகள் திட்டம்: அரசின் பலே ஐடியா!
மரகதப் பூஞ்சோலைகள் அமைக்கும் திட்டத்தின் நோக்கம், உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களைச் சார்ந்து இருப்பதை குறைத்தல் ஆகும்.

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
வனத்துறை அமைச்சர் அவர்களால் 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்) உருவாக்குதல் என்ற திட்டம் 2022-23-ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களைச் சார்ந்து இருப்பதை குறைத்தல் ஆகும். அதன்படி அரசாணை (நிலை) எண் 146, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நாள்.24.08.2022 தேதியில் ரூ.25 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வெளியிடப்பட்டது.
மரகதப் பூங்காக்களில் இடம்பெறும் வசதிகள் என்ன?
மரகதப் பூங்காக்கள் உள்ளூர் மக்களுக்குத் தேவையான இயற்கை வளங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் அதன் மூலம் காடுகளின் மீதான உயிரின தாக்கத்தினை குறைக்கிறது. மரகதப் பூஞ்சோலைகள் மாநில அரசின் தனித்துவமான முன்னெடுப்பாக திகழ்வதுடன் கிராம மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாகவும், கிராமங்களுக்கு எதிர்வரும் காலங்களில் தண்ணீர் மற்றும் காலநிலை பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசினால் ஏற்கனவே 83 மரகதப்பூஞ்சோலைகள் அமைக்க இரண்டு கட்டமாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 75 மரகதப்பூஞ்சோலைகள் 29 மாவட்டங்களில் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று 14.08.2024 தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் 8 மரகதப்பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
ஒவ்வொரு மரகதப்பூஞ்சோலையும், 1 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கம் செய்யப்பட்டு அதில் பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் கதவு, நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேசைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடிமரம், எரிபொருள், தீவனம், காய்/கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை அனைத்து மரகதப்பூஞ்சோலைகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளன.
100 மரகதப்பூஞ்சோலைகள்:
தற்போது, மேலும் 17 மரகதப்பூஞ்சோலைகள் 5 மாவட்டங்களில் மொத்தம் ரூ.425 இலட்சம் செலவில் மேற்கொள்ள மாநில அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மரகதப்பூஞ்சோலைகள் திண்டுக்கல் (5), பெரம்பலூர்(4), கள்ளக்குறிச்சி (3), திருப்பத்தூர் (3) மற்றும் திருவண்ணாமலை (2) ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்படுவதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 100 மரகதப்பூஞ்சோலைகள் கிடைக்கப்பெறும்” எனவெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு: பங்கேற்ற 56 கட்சிகள்- முதல்வர் மொழிந்த தீர்மானங்கள் என்ன?
மக்காச்சோளத்தின் மீதான 1% செஸ் வரி: 500 ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்!
What's Your Reaction?






