"விளம்பர அளவில் செய்தித்தாளில் மன்னிப்பு கேட்டீறா?" பாபா ராம்தேவை மீண்டும் வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்...

பதஞ்சலி விற்பனைப் பொருட்கள் விளம்பர அளவிலேயே மன்னிப்பு செய்தியையும் அனுப்பினீர்களா என அதன் நிறுவனர் பாபா ராம்தேவை உச்சநீதிமன்றம் மீண்டும் விமர்சித்துள்ளது.

Apr 23, 2024 - 12:10
"விளம்பர அளவில் செய்தித்தாளில் மன்னிப்பு கேட்டீறா?" பாபா ராம்தேவை மீண்டும் வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்...

2021ம் ஆண்டு covid 19க்கான முதல் மருந்து எனக்கூறி பதஞ்சலி நிறுவனம் கரோனில் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. அப்பட்டமான பொய் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்த இம்மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் சான்றளித்ததாக பாபா ராம்தேவ் கூறினார். அதோடு அலோபதி என்பது முட்டாள்தனமான திவாலான விஞ்ஞானம் என அவர் கூறியதும் சர்ச்சையானது. இந்நிலையில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோய்களை குணப்படுத்த ஆட்சேபனை மிகுந்த விளம்பரங்களை வெளியிட்டதாகவும் பதஞ்சலி நிறுவனர்கள் பாபாராம்தேவ், பால்கிருஷ்ணா மீது வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தங்கள் விளம்பரங்களை வெளியிடுவதிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதிலும் நடந்த தவறுகளுக்கு மனமார்ந்த மன்னிப்பை கோருகிறோம் என பதஞ்சலி செய்தி வெளியிட்டது. இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஹீமா கோலி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது செய்தித்தாளில் மன்னிப்பு கோரப்பட்டதாக பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், பால்கிருஷ்ணா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறினார். இந்த மன்னிப்பு முன்னதாகவே கோரப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில், நேற்று ஏன் கேட்டார் என நீதிபதி கேள்வியெழுப்பினார். 10 லட்ச ரூபாய் செலவில் மன்னிப்பு கோரப்பட்டதாக ரோஹத்கி கூறிய நிலையில், பதஞ்சலி பொருட்களின் முழுப்பக்க விளம்பர அளவிலேயே மன்னிப்பும் கோரப்பட்டதா என நீதிபதி கேட்டார். இதற்கே லட்சக்கணக்கில் செலவு செய்தோம் என ரோஹத்கி கூறவே, அதைப்பற்றி தங்களுக்கு கவலையில்லை என நீதிபதி பதிலளித்தார்.

தொடர்ந்து மன்னிப்பு செய்தியின் அளவைப் பார்க்க விரும்புவதாகவும், அதனை நகல் எடுத்து கையில் தனக்கு காண்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். இதையடுத்து வழக்கு 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow