Chamkila Review: பஞ்சாப் கில்மா பாடகர் அமர் சிங் பயோபிக் எப்படி..? சம்கிலா ஓடிடி திரை விமர்சனம்!
இந்தியில் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள சம்கிலா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் தமிழ் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
சென்னை: 1980களில் பஞ்சாப் மக்களின் வாழ்விலும் உணர்வுகளிலும் உயிர் மூச்சாக கலந்திருந்தது சம்கிலா என்ற பெயர். தெருப் பாடகனாக மக்கள் முன் வலம் வரத் தொடங்கிய சம்கிலா என்ற அமர்சிங், குறுகிய காலத்தில் மாபெரும் கலைஞனாக விஸ்வரூபம் எடுத்ததெல்லாம் வரலாறு. சம்கிலாவின் கில்மா பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்ப, பல முன்னணி ஆடியோ நிறுவனங்கள் அவரை ஆல்பத்துக்காக புக் செய்தன. சம்கிலா, அவரது மனைவி அமர்ஜோத் கவுர் இணைந்து ஜோடியாக பாடிய ஆல்பங்கள் விற்பனையில் சாதனை படைத்ததோடு, அவரது இசைப் பயணம் சர்வதேச எல்லைகளையும் கடந்தது.
27 வயதுக்குள் புகழ்சியின் உச்சிக்கே சென்ற சம்கிலாவும் அவரது மனைவி அமர்ஜோத் கவுரும் 1988ம் ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்களது இசைக் குழுவைச் சேர்ந்த மேலும் இருவரையும் அந்த மர்ம கும்பல் சுட்டுக் கொலை செய்தது. இப்போது வரை இந்த கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் பஞ்சாப் மக்களின் வாழ்வியலிலும் உணர்வுகளிலும் சம்கிலா என்ற வார்த்தையை பிரித்துப் பார்க்க முடியாது. அப்பேற்பட்ட கலைஞனின் பயோபிக்காக உருவாகியுள்ள படம் தாம் அமர்சிங் சம்கிலா.
பஞ்சாப் மக்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்ட சம்கிலாவை இன்று பாலிவுட் மூலம் உலகம் முழுக்க கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் இம்தியாஸ் அலி. ஆம்! அந்தளவிற்கு உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிக்கிறது சம்கிலா படத்தின் கதையும் திரைக்கதையும். கில்மா பாடல்கள் எளிய மக்களின் வாழ்வியலில் இரண்டற கலந்த ஒன்று. எந்த மொழியாக இருப்பினும் அங்கே தெருகூத்தாகவோ அல்லது வேறு ஏதேனும் வடிவிலோ கில்மா பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அது வெறும் அருவருக்கத்தக்க வார்த்தைகளாக மட்டுமில்லாமல் அந்த மண்ணைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சிகளை பொதுவெளிப்படுத்தும் ஆயுதங்களாக பார்க்கப்படுகின்றன; அதுவே சம்கிலாவின் வெற்றியாகவும் மாறுகிறது.
சம்கிலாவின் முதல் இரண்டு கூட்டணிகள் பணம் பங்குப் பிரிப்பதில் ஏற்படும் அதிருப்தியால் தோல்வியில் முடிய, மூன்றாவதாக அமர்ஜோத் கவுருடன் இணைகிறார். ஒரு கட்டத்தில் தனக்கு மனைவியும் மகனும் இருப்பதை மறைத்துவிட்டு அமர்ஜோத் கவுரை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார் சம்கிலா. இந்தக் கூட்டணிக்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பும் கிடைக்கிறது. பெண்கள் மீதான ஆண்களின் வக்கிர மனநிலையை தனது பாடல்களின் வழியே சம்கிலா பேசுவது சிலரை ஆத்திரப்படுத்துகிறது. அதேபோல் தலித் சமூகத்தைச் சேர்ந்த சம்கிலா, மாற்று சமூகமான அமர்ஜோத் கவுரை திருமணம் செய்துகொள்வதும் சாதிய ரீதியான பிரச்னையாக மாறுகிறது.
கில்மா பாடல்களால் மக்களை சீர் கெடுப்பதாக சம்கிலாவுக்கு கொலை மிரட்டல்கள் வர, உடனே அவர் பக்திப் பாடல்கள் பாடுகிறார். அங்கேயும் சம்கிலாவின் பாடல்களுக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது, ஆனாலும் மக்கள் அவரிடம் கேட்பது என்னவோ கில்மா பாடல்களை மட்டும் தான். இறுதியாக அவர் மீண்டும் மக்களுக்காக கில்மா பாடல்களை துணிந்து பாட, மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். படம் நெடுக இசை… இசை… இசை மட்டும் தான். ஆனாலும் படம் எங்கேயும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பதை மறைத்துவிட்டு அமர்ஜோத் கவுரை இரண்டாவது திருமணம் செய்வது. முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கும் காட்சி, சம்கிலாவின் கில்மா பாடல் வரிகளை பெண்கள் ஏற்றுக்கொள்ளும் இடம், அதனை கொண்டாடும் தருணம், மிரட்டலுக்கு ஆளாகும் போது அதனை சம்கிலா எதிர்கொள்ளும் விதம், மீண்டும் மக்களுக்காக கில்மா பாடல்களை பாடுவது என முடிவெடுப்பது, சம்கிலா இறந்த பின்னர் அவரது நண்பருக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் உரையாடல் என திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக செல்கிறது.
சம்கிலாவாக தில்ஜித் தோசன்ஜ், அவரது மனைவி அமர்ஜோத் கவுர் கேரக்டரில் பரினிதி சோப்ரா இருவரும் அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். குறிப்பாக தில்ஜித் தோசன்ஜ் பாடகர் என்பதால், சம்கிலாவை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார். படத்தின் பெரும் பலமாக இருப்பது ஏஆர் ரஹ்மானின் இசை தான். சம்கிலாவின் ஒரிஜினல் பாடல்களை பல இடங்களில் பயன்படுத்தியதோடு, தனியாகவும் அட்டகாசமான பாடல்களை கொடுத்து சிலிர்க்க வைத்துள்ளார். பின்னணி இசையிலும் அமர்க்களப்படுத்தியுள்ளார் ஏஆர் ரஹ்மான். அதேபோல் வசனங்களும் பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன.
”எல்லா ஆண்களுக்கும் பெண்கள் மீது வக்கிரமான மனநிலை இருக்கும், ஆனால் சம்கிலா அதனை பாடலாக பாடுகிறான்” என மூதாட்டி ஒருவர் பேசும் இடம். “எல்லா தரப்பு மக்களும் சேர்ந்து தான் சம்கிலாவின் பாடல்களை கொண்டாடுகின்றனர், அதனால் தான் வரவேற்பு கிடைக்கிறது..” என போலீஸ் அதிகாரியிடம் சம்கிலாவின் நண்பர் வாக்குவாதம் செய்யும் காட்சி ஆகியவைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். தன் சமூகத்தைச் சேர்ந்த கலைஞனை ஒரு சமூகம் உச்சி முகர்வதும் பின்னர் எப்படி எட்டி உதைக்கிறது என்பதையும் நுணுக்கமாக விவரிக்கிறது சம்கிலா. சமீபத்தில் வெளியான பாலிவுட் படங்களில் மிக முக்கியமான படைப்பாக மிளிர்கிறது. இந்தப் படத்தில் நேரடியாக அரசியல் பேசவில்லை என்றாலும், சில காட்சிகளில் குறியீடுகள் மூலம் அரசியல் பேசியதில் இம்தியாஸ் அலி தனித்து நிற்கிறார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தி உட்பட தமிழ் மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது சம்கிலா. ஆனாலும் சப் டைட்டில் உதவியோடு இந்தி மொழியில் பார்க்க வேண்டிய அற்புதமானதொரு கலை படைப்பு இந்த சம்கிலா.
What's Your Reaction?