மோடியை இங்கே எதிர்ப்பார்.. டெல்லியில் காலில் விழுவார் ஸ்டாலின்.. தமிழ் மகன் உசேன் காட்டம் !
தமிழ்நாட்டில் கடுமையாக மோடியை எதிர்த்துவிட்டு, டெல்லி சென்று காலில் விழுவார் என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வடசென்னை தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பிரசார வழியெங்கும் மேளம்தாளம் முழங்க அதிமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளித்தனர். அத்துடன், வேட்பாளருக்கு பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் கடுமையாக மோடியை எதிர்த்துவிட்டு, டெல்லி சென்று காலில் விழுவார் என கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் என்றும், முதலில் ஆதரித்தது திமுக எனவும் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டை காப்பாற்ற எடப்பாடியால் மட்டுமே முடியும் எனக்கூறினார்.
What's Your Reaction?