மூடப்படாத வாக்கு சேகரிப்பு பெட்டி..? "யார ஏமாத்த பாக்குறீங்க".. கடுப்பான ஆசிரியர்கள் வாக்குவாதம் !

ஆம்பூரில் தபால் வாக்குச்செலுத்தும் பெட்டியில் முறையாக சீல் ஏதும் வைக்கமால் இருந்ததால், தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Apr 7, 2024 - 17:53
மூடப்படாத வாக்கு சேகரிப்பு பெட்டி..? "யார ஏமாத்த பாக்குறீங்க"..  கடுப்பான ஆசிரியர்கள் வாக்குவாதம் !

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வந்து இங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இறுதியாக, ஆசிரியர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தபால் வாக்குகள் வழங்கப்பட்டது.

அதிலுள்ள படிவங்களை நிரப்பி ஆசிரியர்கள் தபால் ஓட்டை தேர்தல் அதிகாரிகளிடம் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு முறையான தபால் பெட்டி வைக்கமால், EB மீட்டரை மூட பயன்படுத்தப்படும் பெட்டியை வைத்து அதற்கு முறையான பூட்டும், சீலும் போடாமல் இருந்துள்ளது. இதில் கடுப்பான ஆசிரியர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

ஆசிரியர்களின் கேள்விகளால் திணறிய தேர்தல் அதிகாரிகள் அவசர அவசரமாக மாற்று தபால் பெட்டியை ஏற்பாடு செய்து அதற்கு முறையாக பூட்டு போட்டு சீல் வைத்தனர். அதன் பின்னரே பெட்டியை உறுதி செய்து ஆசிரியர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஆசிரியர்கள், இதே போன்று நாங்கள் செய்திருந்தால் தங்களது வேலையே காலியாகியிருக்கும் என கோபத்துடன் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow