ஏகனாபுரம் மாணவர்களின் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
பள்ளிக்கு ஆர்வமுடன் ஏகனாபுரம் மாணவர்கள் வருகைப்புரிந்து கல்வி பயின்று வருகின்றனர்.
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று பள்ளிக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.
சென்னையின் இரண்டாவது புதிய பசுமைவெளி விமான நிலையமானது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.இத்திட்டத்திற்கு எதிராக கடந்த 504 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக நிர்வாக அனுமதியை தமிழக அரசானது வழங்கி அரசாணையை வெளியிட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட போராட்டக் குழுவினர் காலவரையற்ற பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்த நிலையில், ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காலவரையற்ற பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை கடந்த 1ந் தேதி தொடங்கி நேற்று வரையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு ஏகனாபுரம் கிராம மக்கள் அனுப்பவில்லை.
ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை 117 மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் நிலையில் பள்ளி ஒருவர் பள்ளிக்கு வரவில்லை.இந்நிலையில் நேற்று இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அப்பள்ளிக்கு வந்த மாவட்ட தொடக்கப்பள்ளி கல்வி அலுவலர் நளினி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு அதன் பின்னர் அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தன் பெயரில் உடன்பாடு எட்டப்பட்டு அவர்களை விடுவித்து தங்களது பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில், பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட போராட்டக் குழுவினர் அறிவித்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை ஏகனாபுரம் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர்.பள்ளி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் பள்ளிக்கு ஆர்வமுடன் ஏகனாபுரம் மாணவர்கள் வருகை புரிந்து கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் இன்று மாலை அமைச்சர்கள் சந்திப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட போராட்டக் குழுவினர் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?