ஆவடி இரட்டைக்கொலை.. சிக்கிய செல்போன்.. ராஜஸ்தான் இளைஞரை விசாரிக்கும் போலீஸ்

ஆவடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Apr 29, 2024 - 11:53
ஆவடி இரட்டைக்கொலை.. சிக்கிய செல்போன்..  ராஜஸ்தான் இளைஞரை விசாரிக்கும் போலீஸ்

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவன் நாயர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சித்தா மருத்துவராகவும் இருக்கிறார். இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம் போல  நேற்று ( ஏப்ரல் 28) வீட்டில் சிகிச்சைப் பார்த்து வந்துள்ளார். அவரிடம் சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான பல்வேறு அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள  பகுதியில் மாலை நேரத்தில் வெகு இயல்பாக வந்து கணவன் மனைவி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர் அய்மன் ஜமால் தலைமையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். 

சித்த வைத்தியரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா என்றும்,குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்ததபட்டு இருக்குமா என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து வரும் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் மேலும் கொலை அரங்கேறிய வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர் மேலும் சம்பவ இடத்திற்கு ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரடியாக பார்வையிட்டு கொலையாளிகளை துரிதமாக பிடிக்க உத்தரவிட்டார்.

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான முப்படைகள் மட்டும் இன்றி படை உடை பீரங்கி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படக்கூடிய பகுதியில் கடந்த வாரம்  ஒன்றரை கோடி மதிப்புள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட பரபரப்பு குறைவதற்குள் கணவன் மனைவி வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,, போதிய சிசிடிவி கண்காணிப்பு இல்லை முறையாக ரோந்து பணியில் போலீசார் ஈடுபடவில்லை என பகுதி வாசிகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

இதனிடையே கொலை நடந்த வீட்டில் செல்போன் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சித்த வைத்தியரிடம் சிகிச்சைக்கு வந்த ராஜஸ்தான் மாநில இளைஞரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow