பட்டியலின மாணவிகளுக்கு கொடுமை தலைமை ஆசிரியரின் இழிச்செயல் நடவடிக்கை பாயுமா..?

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில், பள்ளி தலைமை ஆசிரியை தங்களை கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதாக, 2 சிறுமிகள் பேசிய வீடியோ வைரலாகி, மக்களை கொந்தளிக்க வைத்த நிலையில், விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். 

Apr 29, 2024 - 11:42
பட்டியலின மாணவிகளுக்கு கொடுமை தலைமை ஆசிரியரின் இழிச்செயல் நடவடிக்கை பாயுமா..?

தீண்டாமை என்ற கொடூரம் மாணவர்கள் மனதில் படிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான், பாடநூல்களின் முதல் பக்கத்தில், தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என அச்சிடப்பட்டு வருகிறது. 

ஆனால், பாடம் சொல்லித்தரும் ஒரு ஆசிரியையே சாதியின் அடிப்படையில் இரு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருக்கும் கொடுமை, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தில் அரங்கேறியுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர், குமாரபாளையம் அரசுப்பள்ளியில் பயிலும் இரு மாணவிகள், தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை தங்களை தினந்தோறும் கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி வற்புறுத்துவதாக பேசிய வீடியோ வைரலாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்த காட்சி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து, தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார். 

குறிப்பிட்ட அந்த வகுப்பில் 15 பேர் படிக்கும் நிலையில், பட்டியல் சமூகத்தைச் மாணவிகள் என்பதால், தாங்கள் இருவர் மட்டுமே கழிவறையை சுத்தம் செய்து வந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கழிவறையை சுத்தம் செய்யவில்லை என்றால், காலை வந்தவுடன் தலைமை ஆசிரியை "இளமதி ஈஸ்வரி"  பெரம்பால் அடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

தமிழக அரசின் கல்வித்துறை மூலம், கழிவறை சுத்தம் செய்யும் பணிக்காக அரசு நிதியிலிருந்து பணம் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் தொகையை தலைமை ஆசிரியர் தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்திக்கொண்டு, மாணவர்களிடம் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  இது போன்ற செயல்களில் மாணவிகளை ஈடுபடுத்திய தலைமை ஆசிரியைக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow