ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டம்..! நாடாளுமன்றம் செல்லும் அசோக் சவான்..! ஜெ.பி.நட்டாவும் இனி எம்.பி.!

Feb 14, 2024 - 17:23
ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டம்..! நாடாளுமன்றம் செல்லும் அசோக் சவான்..! ஜெ.பி.நட்டாவும் இனி எம்.பி.!

மத்திய அமைச்சர்களாக பதவி வகிக்கும் எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஒரே நாளில் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர்  அசோக்  சவானுக்கு எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை என பல்வேறு அரசியல் கட்சிகள் கள ஆய்வு மேற்கொண்டு மும்முரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பதவிக் காலம் நிறைவடைந்த மாநிலங்களைவை உறுப்பினர்களை மீண்டும் தேர்வு செய்வதில் ஆளும் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

அந்த வகையில் மத்திய இணையமைச்சராக உள்ள எல்.முருகன் மீண்டும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மாநிலங்களவை புதிய உறுப்பினராக தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அசோக் சவான்  பாஜகவில் இணைந்து ஒரே நாள் மட்டுமே ஆன நிலையில், அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது சவான் தரப்பினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசோக் சவானுக்கு அமைச்சரவையில் இடமளிக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.  

இதேபோல் பாஜக தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டா குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கேபினட் அமைச்சராகும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. அதேவேளையில் ஜே.பி.நட்டா பாஜக தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவில் இணைந்த இரண்டே நாளில் அசோக் சவான் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது எதிர்க்கட்சியினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஜகவின் இந்த வியூகம் எதிர்க்கட்சியினர் பலரையும் தங்களது இணைய வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow