புத்திரசோகம் ரொம்ப மோசமானது.. கலங்கி நின்ற சைதை துரைசாமி..! ஓடோடிச் சென்ற ரஜினிகாந்த்..!

Feb 14, 2024 - 17:33
Feb 14, 2024 - 17:41
புத்திரசோகம் ரொம்ப மோசமானது.. கலங்கி நின்ற சைதை துரைசாமி..! ஓடோடிச் சென்ற ரஜினிகாந்த்..!

இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சிக்கி சைதை துரைசாமியின் மகன் வெற்றி உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் கூறினார்.

சென்னையின் முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. 45 வயதான வெற்றி புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் எனக்கூறப்படும் நிலையில், அவர் பல்வேறு பகுதிகளுக்கு  சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.  அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன் இமாச்சலப்பிரதேசத்திற்கு  திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்ற உதவியாளருடன் வெற்றி சென்றுள்ளார். தொடர்ந்து சுற்றுப்பயணைத்தை முடித்துக்கொண்டு கடந்த 4-ஆம் தேதி சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தபோது,  அவர்களது வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  கஷாங் நாலா பகுதியின் 200 அடி பள்ளத்தாக்கில் உருண்டு சட்லஜ் நதியில் விழுந்தது. 

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தஞ்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உதவியாளர் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். ஆனால் ஆற்றில் விழுந்த வெற்றி துரைசாமி அடித்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெற்றி துரைசாமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்தார். முதற்கட்டமாக மாநில மீட்புப்படையினரின் உதவியுடன்  வெற்றியை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீசார் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வந்தனர். விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட இமாச்சலப்பிரதேச போலீசார், ஆற்றில் மூழ்கிய காரை மீட்டு சோதனை செய்ததில், அதில் வெற்றியின் செல்போன் மீட்கப்பட்டது. மேலும் விபத்து நடந்த இடத்தில் ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதோடு, வெற்றி துரைசாமியின் பெற்றோரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன. 

ஆனாலும் தேடும் பணியில் முன்னேற்றம் கிடைக்காததால் வெற்றியைப் போன்ற உருவம் மற்றும் எடை கொண்ட பொம்மை ஒன்று உருவாக்கப்பட்டு அதனை சட்லஜ் நதியில் வீசப்பட்டு விபத்து ஒத்திகையையும் மீட்பு படையினர் மேற்கொண்டனர். இந்நிலையில் பல்வேறு கட்ட தேர்தலுக்கு பின் உள்ளூர்  நீச்சல் வீரர்களின் தொடர் முயற்சியால் வெற்றி துரைசாமி  9 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து உடற்கூராய்வுக்கு பின் இமாச்சலில் இருந்து விமானம் மூலம்  சென்னை கொண்டுவரப்பட்ட வெற்றியின் உடல் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்  நேரில் சென்று  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தாம்பரம் பன்னை வீட்டிற்கு சென்ற வெற்றியின் நண்பரும் நடிகருமான அஜித் குமார் சைதை துரைசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

வெற்றியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, வெற்றியின் இழப்பால் நான் கலங்கமாட்டேன், எனக்கு சென்னையில் ஐ.ஏ.எஸ் மகன்கள், மகள்கள் நிறைய பேர் உள்ளனர், எனக்கு ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என மிகவும் உருக்கமாக பேசினார். இந்நிலையில் சைதை துரைசாமியின் இல்லத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் மகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக வெற்றியின் குடும்பத்தினரிடம் உரையாடிய ரஜினிகாந்த், சைதை துரைசாமிக்கு தெம்பூட்டும் வகையில் ஆறுதல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow