"பிஜூ கட்சியின் Expiry Date ஜூன் 4 " ஒடிசாவில் பரபரப்பை கிளப்பிய பிரதமர் மோடி !

ஒடிசாவில் நடைபெற்ற பாஜக பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, பிஜூ ஜனதா தள கட்சியின் ஆட்சி ஜூன் 4ஆம் தேதி கட்டாயம் அகற்றப்படும் என தெரிவித்தார்.

May 6, 2024 - 18:18
"பிஜூ கட்சியின் Expiry Date ஜூன் 4 " ஒடிசாவில் பரபரப்பை கிளப்பிய பிரதமர் மோடி !

2024 மக்களவை தேர்தலுடன், ஒடிசாவுக்கு 4 கட்டங்களாக சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. இதனால் ஆளும் ஜனதா தள கட்சி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. 

ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி அங்கு தொடர்ந்து 5வது முறையாக ஆட்சிக்கட்டிலில் உள்ளது. அதோடு, 2000-மாவது ஆண்டில் இருந்து நவீன் பட்நாயக் தான் அங்கு முதலமைச்சராக இருக்கிறார். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜக ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். 

இந்நிலையில், மக்களவையின் 2 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், 3ஆம் கட்ட தேர்தல் நாளை(மே7 ) நடைபெறுகிறது. தொடர்ந்து 4வது கட்டத்தில் இருந்து 7ஆம் கட்டம் வரை ஒடிசாவில் மக்களவை தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் ஒடிசாவில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. 

அதன்படி, ஒடிசாவின் நாபரங்புரே பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவுக்கு, முதல் பாஜக முதல்வர் கிடைப்பார், அவர் ஒடிசா மொழி மற்றும் கலாச்சாரம் அறிந்த ஒடிசாவைச் சேர்ந்த நபராகவும் இருப்பார் எனக்கூறினார். 

கட்டாயம் டபுள் என்ஜின் அரசாங்கம் டெல்லி மற்றும் ஒடிசாவில் பல மாற்றங்களை கொண்டு வரும் எனவும் தெரிவித்த அவர், சட்டமன்றத்தை போல, மக்களவையிலும் பாஜகவே வெற்றி பெற்று, 21 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் கோடி ரூபாயை மக்களுக்காக கொடுத்தும், அதை வாங்க பிஜூ ஜனதா தளம் மறுத்ததால், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் சென்று சேரவில்லை என குற்றம்சாட்டினார். 

மேலும், ஜூன் 4ஆம் தேதி பிஜூ ஜனதா தள கட்சியின் Expiry Date எனக்கூறிய மோடி, ஜூன்10ஆம் தேதி பாஜக ஆட்சி அமையும், அப்போது நடக்கும் விழாவுக்கு உங்களை அழைப்பேன், நீங்கள் அதை மறுக்க மாட்டீர்கள் என்றும் உறுதிபட கூறினார். 

இதனிடையே, பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய ஒடிசா முதலமைச்சர்  நவீன் பட்நாயக், மாநிலத்தின் வளர்ச்சித்திட்ட தலைவர் விகே பாண்டியனுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைக்கும் என பகல் கனவு கண்டுக்கொண்டிருப்பதாக விமர்சித்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow