"2 பேரும் ஒரே மாதிரி தான்.." பிரதமர் - ராகுலை குற்றம்சாட்டி பாஜக, காங்-க்கு ECI நோட்டீஸ்...

மக்களவைத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி - ராகுல்காந்தி ஆகியோரை குற்றம்சாட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

Apr 25, 2024 - 13:44
"2 பேரும் ஒரே மாதிரி தான்.." பிரதமர் - ராகுலை குற்றம்சாட்டி பாஜக, காங்-க்கு ECI நோட்டீஸ்...

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி, வறுமை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறி கடந்த 22ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகாரளித்தது. மொழி, புவியியல் அடிப்படையில் பிராந்தியப் பிளவுகளை அவர் உருவாக்க முயற்சித்ததாகவும் பாஜக குற்றம்சாட்டியது.

தொடர்ந்து அதேநாளில் பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக காங்கிரசும் பாஜக மீது புகாரளித்தது. இந்தியர்களிடையே பிரிவினையை விதைக்க முயற்சிக்கும் பிரதமர் மோடி போன்ற வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது. ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்துப் பெண்களின் மாங்கல்யத்தை இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதாகக் கூறியது பேசுபொருளானது.

இந்நிலையில் விதிமுறை மீறல்கள், வெறுப்புப் பேச்சு, பிரிவினைக் கருத்து உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதமர் மோடி, ராகுல்காந்தியை குற்றம்சாட்டி பாஜக - காங்கிரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், காங்கிரஸ் சார்பில் அதன் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களும் குறிப்பாக நட்சத்திரப் பேச்சாளர்களும் தங்களின் பேச்சு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டு தங்கள் நடத்தைக்கு முதன்மைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow