பீகாரில் தொகுதி பங்கீடு... நிதீஷுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கியது பாஜக..?
மக்களவை தேர்தலில் பீகாரில் 17 தொகுதிகளில் களம் காண்கிறது பாஜக.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 தொகுதிகளை பாஜக ஒதுக்கீடு செய்துள்ளது.
"இந்தியா" கூட்டணியில் பெரும் பலமாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்தார். அவரது திடீர் முடிவு "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் பீகாரில் NDA கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகாரில் 17 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 தொகுதிகளும், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ராஷ்டிரீய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பீகாரில் NDA கூட்டணியில் பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16 மற்றும் லோக் ஜனசக்தி 6 என 39 தொகுதிகளை கைப்பற்றின. காங்கிரஸ் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் பாஜக கோட்டையாக திகழும் பீகாரில், நிதீஷ்குமாரை இழந்துள்ள "இந்தியா" கூட்டணி தனது பலத்தை நிரூபிக்குமா? அல்லது கடந்த முறைபோல வீழுமா? என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?