குஜராத்தில் பசுமை எரிசக்தி பூங்கா… பாரிஸை விட 5 மடங்கு பெருசாம்..

Apr 12, 2024 - 20:32
Apr 12, 2024 - 20:33
குஜராத்தில் பசுமை எரிசக்தி பூங்கா… பாரிஸை விட 5 மடங்கு பெருசாம்..

உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை குஜராத் மாநிலம் கவ்டா பகுதியில் அதானி குழுமம் அமைத்துள்ளது.

அதானி குழுமம் தளவாடங்கள், வேளாண், ரியல் எஸ்டேட், சிமெண்ட், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறது. தற்போது அக்குழுமத்தின் பசுமை எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் எரிசக்தி சார்ந்த திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


அதன்படி, குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள கவ்டாவில் மிகப்பெரிய எரிசக்தி பூங்காவை அதானி குழுமம் உருவாக்கியுள்ளது.  இந்தப் பூங்கா 538 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 30 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடியை இந்தப் பூங்காவில் அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளது. மேலும், இந்தப் பூங்கா பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தை விட 5 மடங்கு பெரியது எனக் கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அளவிற்கு 81 பில்லியன் யூனிட்களை கவ்டா எரிசக்தி பூங்காவில் இருந்து உற்பத்தி செய்ய முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பேசிய அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின், கவ்டா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிசக்தி பூங்காவில் தற்போது 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளோம் எனவும், நடப்பு நிதியாண்டு முடியும் மார்ச் 2025-ல் 4,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார். அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். கவ்டா எரிசக்தி பூங்கா 30 ஜிகாவாட் சூரிய சக்தி மின்சாரம் மற்றும் 4 ஜிகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 


இதுகுறித்து அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பசுமை எரிசக்திக்கான உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவின் முக்கிய பங்கை கவ்டா எரிசக்தி பூங்கா எடுத்துக்காட்டுவதாக பெருமிதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow