மகனை கொன்று நாடகமாடிய தந்தை.. பேரனுடன் கைது செய்த காவல்துறை...

வீடு கட்டும் பணி தொடர்பாக ஏற்கனவே தந்தை மகனுக்கு இடையே சண்டை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

Apr 25, 2024 - 13:48
மகனை கொன்று நாடகமாடிய தந்தை.. பேரனுடன் கைது செய்த காவல்துறை...

தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும், கைகலப்புகளும் இருப்பது பல இடங்களில் இயல்பாக நடக்கும் ஒன்றே. ஆனால், கரூரில் மகனுடன் இருந்த விரோதத்தால் தந்தை பேரனுடன் சேர்ந்து மகனை கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாகக்கூறி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், ஜெகதாபியை சேர்ந்த மனோகரன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மனோகரன் சேலம் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மனோகரன் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இந்த வீடு கட்டும் பணி தொடர்பாக ஏற்கனவே தந்தை மகனுக்கு இடையே சண்டை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனோகரனின் மனைவி சுதா, தனது கணவர் வந்த பின்பு வீடு கட்டும் பணியை தொடங்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் மதுபோதையில் மருமகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுதா கூறியதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த மனோகரன் தந்தை மாணிக்கத்துடன் சண்டையிட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும், அதில் மனோகரன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதை மனோகரனின் மனைவி சுதாவிடம் கூறிய மாணிக்கம் வெளியே சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது. அதன்பின், நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் வரவழைத்து மகன் விபத்தில் இறந்துவிட்டான் எனக்கூறி அழுது புலம்பி நாடகமும் ஆடியுள்ளனர். இதேவேளையில் சுதா போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அப்போது விரைந்து வந்த வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து மாணிக்கம் மற்றும் மணிராஜை கைது செய்தனர். தொடர்ந்து கரூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்காக திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow