பல ஆண்டு கோரிக்கை... மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிறைவேறிய மராத்தா இடஒதுக்கீடு மசோதா....

Feb 20, 2024 - 16:55
பல ஆண்டு கோரிக்கை... மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிறைவேறிய மராத்தா இடஒதுக்கீடு மசோதா....

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் விவசாயிகள், தச்சர்கள் உள்ளிட்ட 96 சாதிகளைச் சேர்ந்தவர்கள் மராத்தா சமூகத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இம்மாநிலத்தில் 28% உள்ளனர். இந்த மராத்தா பிரிவு மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 20ம் தேதி மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி சமூக நல செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் நவி மும்பையிலுள்ள ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார். 

முன்னதாக கடந்த 2017-ல் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அப்போதைய அரசு, மராத்தா சமூகத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி எம்ஜி கெய்க்வாட், 2018 நவம்பரில் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தார். அதில், மராத்தா சமூகம் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் மராத்தா சமூகத்தின் நிலை குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி சுனில் சுக்ரி தலைமையிலான மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிக்கையை அரசுக்கு வழங்கியது. 9 நாட்களில் 2.5 கோடி குடும்பங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, மகாராஷ்டிர மாநில சமூக பொருளாதார பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சட்டம் 2018 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் மராத்தா சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை இன்று (பிப்.20) ஒப்புதல் வழங்கியது. தொடர்ந்து சட்டமாக்கும் நோக்கில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு மராத்தா இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow