மணிப்பூர் துப்பாக்கிச்சூட்டில் CRPF வீரர்கள் பலி.. இதனால் தான் தாக்குதலா? வெளியான அதிர்ச்சிக்காரணம்..
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
மணிப்பூரில் ஓராண்டாக குகி - மெய்தி இனப் பிரச்னை எதிரொலியாக வன்முறை வெடித்து வரும் நிலையில், மிகுந்த பதற்றத்துக்கு மத்தியில் அங்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் பிஷ்ணுபூர் மாவட்டம் நாராயணசேனா என்ற கிராமத்தின் பதற்றமான மலைப்பகுதியில் இந்திய ரிசர்வ் படாலியன் முகாமில் தேர்தல் பணியை முடித்துக்கொண்டு பாதுகாப்புப் பணிக்காக சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்கியிருந்தனர். அப்போது குகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக்குழு என சந்தேகிக்கப்படுபவர்கள் நள்ளிரவு 12 முதல் 2.30 மணி வரை பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது.
மலைஉச்சியில் இருந்து பம்பி கன் என்ற துப்பாக்கியை பயன்படுத்திய அந்த ஆயுதக்குழு, வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி சப்-இன்ஸ்பெக்டர் N.சர்க்கார் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் அருப் சைனி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் ஜாதவ் தாஸ் மற்றும் கான்ஸ்டபிள் அஃப்தாப் தாஸ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குகி - மெய்தேய் இனத்தவர்களிடையே கடந்த ஆண்டு வெடித்த வன்முறையைத் தொடர்ந்து நரன்சீனா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெய்டேய் மற்றும் குகி-சோ ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இரு தரப்பினரும் தங்களை "கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள்" என்று அழைத்துக் கொள்ளும் நிலையில், இது மணிப்பூர் பாதுகாப்புப் படையினருக்கு சவால் பணியாக அமைந்தது. ஏற்கனவே கலவரம் நடந்து பதற்றத்துக்குள்ளான ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரும் நாட்களில் அப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த குகி ஆயுதக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?