மின்வாரிய ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு - கோர்ட் உத்தரவு

மின்வாரிய அலுவலகங்களில், அலுவலர்கள், ஊழியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறைக்கான சாத்திய கூறுகளை பரிசீலிக்குமாறு உத்தரவு

Dec 8, 2023 - 15:54
Dec 8, 2023 - 20:28
மின்வாரிய ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு - கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில், அலுவலர்கள், ஊழியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை பரிசீலிக்க மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா.லோகு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள 12 மின்வாரிய மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள், செயல் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அலுவலகங்கள், பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் ஊழியர்கள் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்றும், இதனால் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வராததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதால் அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் ஊழியர்களின்  வருகையை பதிவு செய்ய ஆதார் இணைப்புடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவியை பொருத்த உத்தரவிடவேண்டும் என்று  கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் மின் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பயோ மெட்ரிக் பதிவேடு முறையை, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நிதிநிலை கருத்தில் கொண்டு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.மின்வாரியத்தில் நிர்வாகம் மற்றும் கணக்குப் பிரிவு தொழில்நுட்ப பிரிவுகளில், அலுவல் சார்ந்த பணிகள் இருப்பதால் மாநில தலைமையகங்களில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி பிரிவை பொறுத்தவரை, ஏற்கனவே மின்னணு வருகை பதிவு முறை கடந்த 2019 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிர்மான பிரிவைப்  பொறுத்தவரை அமல்படுத்துவது தொடர்பாக சாத்திய கூறுகள் மற்றும் நடைமுறைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நேரடியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை, இதில் சில சவால்கள் உள்ளதாகவும், பல நாட்களில் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட களத்திற்கு மட்டுமே செல்லலாம், அதன் பிறகு அலுவலகத்திற்கு வரக்கூடிய  சூழ்நிலைகளில், விநியோக பகுதி போன்ற களப் பகுதிகளில் இந்த முறையை நிறுவுவது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
 
தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான நுகர்வோர் புகார்கள், குறைகளை நிவர்த்தி செய்வதில் தாமதம் ஏற்படலாம். எனவே, பதிலளிப்பவரின் பணியின் தன்மை மிகவும் வித்தியாசமாக இருப்பதால், மின்சாரத் துறைக்கு இந்த முறை நேரடியாகப் பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் மின்னணு அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை சரியான நேரத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது..

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரிய அலுவலகங்களில், அலுவலர்கள், ஊழியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறைக்கான சாத்திய கூறுகளை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow