'நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்' - EPS : 'எப்படி நலமாக இருக்க முடியும்?' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும், என்றும் நலமாகவே இருப்பார்கள் - டி.ஆர்.பி.ராஜா

Mar 6, 2024 - 18:40
'நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்' - EPS : 'எப்படி நலமாக இருக்க முடியும்?' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

நீங்கள் நலமா திட்டம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

'நீங்கள் நலமா' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'நாங்க நலமாக இல்லை ஸ்டாலின்' என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அந்த பதிவில் "நலத் திட்டங்கள் நின்றுவிட்டன, சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்துவிட்டது, எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாகிவிட்டது. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை" என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில்...

  • விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?.
  • பதவியைக் காப்பாற்ற பாஜக.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?.
  • தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?.
  • பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரர்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?.
  • சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAA-வுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?.
  • கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?.
  • கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும், கொள்ளையும் நடக்கவிட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? 

என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக சாடியுள்ளார். மேலும், உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும், என்றும் நலமாகவே இருப்பார்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow