விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய காவேரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தல்
செய்யாறு பகுதியில் மூன்றாவது சிக்பாட் அமைப்பதை கைவிட வேண்டும்.
"மண் காக்கும் போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடாதே" என்ற தலைப்பில் காவேரி உரிமை மீட்பு குழு சார்பில் வருகிற 30-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவேரி உரிமை மீட்பு குழுவின் அவசர ஆலோசனைக்கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெ.மணியரசன்,“ தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கையால் வேலை பார்க்கிறது. விவசாயத்தை அழிப்பது கிராமத்தை அழிப்பதற்கு சமம்.கிராமத்தை அழிப்பது தமிழர் தாயகத்தை அழிப்பதற்கு சமம்.
நில ஒருங்கிணைப்பு சட்டம் என்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இந்தச் சட்டம் மூலம் நிலத்தை கையகப்படுத்தும் போது யார் தடுத்தாலும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்.
எனவே இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.செய்யாறு பகுதியில் மூன்றாவது சிக்பாட் அமைப்பதை கைவிட வேண்டும். ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
புதிதாக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. இப்பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி "மண் காக்க போராடும் விவசாயிகள் மீது குண்டு சட்டம் போடாதே என்ற தலைப்பில் வருகிற 30-ஆம் தேதி தஞ்சை ரயில் நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு இயக்கத்தினர் - அமைப்பினர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?